தாயகத்துக்கு பணம் அனுப்புவோர் பட்டியலில் இந்தியா முதலிடம்
தாயகத்துக்கு பணம் அனுப்புவோர் பட்டியலில் இந்தியா முதலிடம்
ADDED : டிச 20, 2024 02:11 AM

புதுடில்லி,:வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள், 2024ல் தங்கள் சொந்த நாட்டுக்கு, 10 லட்சத்து 70,700 கோடி ரூபாய் பணம் அனுப்பி, இந்தியாவை முதலிடத்துக்கு உயர்த்தி உள்ளனர்.
வெளிநாடுகளில் வேலை செய்வோர் தங்கள் சொந்த நாட்டில் உள்ள குடும்பத்தினர், நண்பர்களுக்கு பணம் அனுப்பும்போது, சம்பந்தப்பட்ட நாட்டுக்கு அதன் வாயிலாக வருவாய் கிடைக்கிறது. நடப்பாண்டில், வெளிநாட்டில் இருந்து தாயகத்துக்கு பணம் அனுப்பியோர் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இது குறித்து, உலக வங்கியின் பொருளாதார நிபுணர்கள் தலிப் ரத்தா, சோனியா பிளாசேங், ஜு கிம் ஆகியோர் எழுதியுள்ள வலைப்பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
1 வெளிநாடுகளில் வேலை பார்த்து, சொந்த நாட்டுக்கு பணம் அனுப்புவோர் பட்டியலில், நடப்பாண்டில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இதுவரை, 10 லட்சத்து 70,700 கோடி ரூபாய் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது
2 கொரோனா தொற்று பரவலுக்கு பின், அதிக வருவாய் உள்ள நாடுகளில் வேலை வாய்ப்பு சந்தை சீரடைந்துள்ளதை அடுத்து இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
3 இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. வெளிநாடுகளில் பணம் அனுப்புவதன் வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 1.2 சதவீதமாக இருந்தது; இந்தாண்டு 5.8 சதவீதமாக உயர்ந்து உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவது அதிகரிக்கும் போது, அன்னிய நேரடி முதலீடு சரியத் துவங்குவது வழக்கம்.
கடந்த 10 ஆண்டுகளில், வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பப்படுவது 57 சதவீதமாக உயர்ந்த நிலையில், அன்னிய நேரடி முதலீடு 41 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.
எனவே, பணம் அனுப்புதல் மற்றும் அன்னிய நேரடி முதலீடு ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி, மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு பெரும் பணம் அனுப்பி வைக்கப்படுவதால், தெற்காசியாவிற்கு அனுப்பப்படும் பணம், வரும் நாட்களில் அதிகபட்சமாக 11.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.