இந்தியா - பிரிட்டன் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது
இந்தியா - பிரிட்டன் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது
ADDED : மே 07, 2025 01:16 AM
புதுடில்லி: மிக நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த, இந்தியா - பிரிட்டன் இடையேயான எப்.டி.ஏ., எனப்படும் தாராள வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் இருந்து தனியாக பிரிந்து வந்தது. இதைத் தொடர்ந்து, பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேசி வந்தது.
சமூக பாதுகாப்பு
அந்த வரிசையில், இந்தியா - பிரிட்டன் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக பேசப்பட்டு வந்தது.
இந்தாண்டு இறுதிக்குள் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான முயற்சிகளில் இரு நாடுகளும் ஈடுபட்டு வந்தன.
அண்டை நாடான பாகிஸ்தானுடன் போர் பதற்றம் உள்ள நிலையிலும், நாட்டின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவற்றில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். அந்த வரிசையில், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமருடன் தொலைபேசி வாயிலாக அவர் நேற்று பேசினார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு:
நல்ல நண்பரான பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமருடன் பேசியது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, இரு தரப்புக்கும் பலனளிக்கக் கூடிய, தாராள வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தவிர, 'டபுள் கான்ட்ரீபியூஷன் கன்வென்ஷன்' எனப்படும், ஒரே நேரத்தில் இரு நாடுகளில் சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் சேர வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்கும் ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, இரு நாட்டு தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு பெரும் பலன் கிடைக்கும். இரு நாட்டிலும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் இணைய வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது.
வலுவடையும்
இந்த ஒப்பந்தங்கள் வாயிலாக, இரு நாட்டின் வர்த்தகம், முதலீடு, வளர்ச்சி, வேலை வாய்ப்புகள், புதுமை கண்டுபிடிப்புகள் வலுவடையும். அதன் வாயிலாக இரு நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும். பிரதமர் ஸ்டாமரை விரைவில் இந்தியாவுக்கு வரும்படி அழைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
'இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் வர்த்தகத்துக்கு இருந்த தடை நீக்கப்படுகிறது. இது இரு நாட்டுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்படும்' என, சமூக வலைதளப் பதிவில் ஸ்டாமர் கூறியுள்ளார்.