இறையாண்மையை காக்க வேண்டும்; சிரியாவுக்கு இந்தியா வேண்டுகோள்
இறையாண்மையை காக்க வேண்டும்; சிரியாவுக்கு இந்தியா வேண்டுகோள்
UPDATED : டிச 10, 2024 03:08 PM
ADDED : டிச 10, 2024 03:31 AM

டமாஸ்கஸ் : 'பதற்றம் நிலவும் சிரியாவில் ஒற்றுமை, இறையாண்மையை காக்க, அங்குள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என நம் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மேற்காசிய நாடான சிரியாவில், ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கும், சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும், கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்தது.
துருக்கி ஆதரவு பெற்ற ஹயாத் தாஹ்ரிர் அல்ஷாம், சிரியா தேசிய படை, அமெரிக்க ராணுவத்தின் ஆதரவு பெற்ற பிரீ சிரியா படை உள்ளிட்ட பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் சிரியா அரசுக்கு எதிராக போரிட்டு வந்தன.
சிரியா அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் ஈரானும் ஆதரவு அளித்து வந்தன.
இந்த சூழலில், ஹெச்.டி.எஸ்., எனப்படும் ஹயாத் தாஹ்ரிர் அல்ஷாம் என்ற அரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிப் படைகள், கடந்த மாதம், 27ம் தேதி தீவிர தாக்குதலை துவங்கின.
அலெப்பா, ஹாம்ஸ், டாரா, குனேத்ரா, சுவேடா நகரங்களைக் கைப்பற்றிய அந்தபடை, நேற்று முன்தினம் தலைநகர் டமாஸ்கசையும் கைப்பற்றின.
இதையடுத்து, அதிபர் ஆசாத், தனி விமானம் வாயிலாக நாட்டைவிட்டு தப்பிச் சென்றார். அவருக்கு ரஷ்யா அடைக்கலம் தந்துள்ளது தெரியவந்துஉள்ளது.
இதற்கிடையே, சிரியாவில் பதற்றமான சூழல் நிலவுவதால், அங்குள்ள இந்தியர்களின் நிலை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக நம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள இந்திய துாதரகம், அங்குள்ள இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளது.
சிரியாவின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் செயல்பட வேண்டியதன் அவசியத்தை நாங்கள் அடிகோடிட்டு காட்டுகிறோம்.
'அமைதியான மற்றும் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய தலைமையை நாங்கள் ஆதரிக்கிறோம்' என தெரிவித்துள்ளது.