இந்தியா நக்சலிசத்திலிருந்து முற்றிலும் விடுபடும்; டிஜிபிக்கள் மாநாட்டில் அமித்ஷா உத்தரவாதம்
இந்தியா நக்சலிசத்திலிருந்து முற்றிலும் விடுபடும்; டிஜிபிக்கள் மாநாட்டில் அமித்ஷா உத்தரவாதம்
ADDED : நவ 28, 2025 10:24 PM

ராய்ப்பூர்: அடுத்த டிஜிபிக்கள், ஐஜிக்கள் மாநாட்டிற்கு முன், இந்தியா நக்சலிசத்திலிருந்து முற்றிலும் விடுபடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
சத்தீஸ்கரின் ராய்ப்பூரில், 60வது டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு இன்று தொடங்கி வரும் நவ., 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: நாட்டின் மூன்று சிறந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சிறப்பான சேவைக்கான பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அடுத்த டிஜிபிக்கள், ஐஜிக்கள் மாநாட்டிற்கு முன்பு இந்தியா நக்சலிசத்திலிருந்து முற்றிலும் விடுபடும். போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் செய்பவர்களுக்கு எதிராக, அனைத்து திசையில் இருந்தும் 360 டிகிரி தாக்குதலைத் தொடங்க வேண்டும். போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குற்றவாளிகள் இந்தியாவில் ஒரு அங்குல நிலம் கூட வாங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்காக, பாஜ அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 2014ல் 126ஆக இருந்தது, இன்று வெறும் 11 ஆகக் குறைந்துள்ளது. உளவுத்துறையின் செயல்பாடு காரணமாக, பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
மாநில போலீசார், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு மூளையாக இருப்பவர்களையும் சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

