அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: பிரதமர் மோடி உறுதி
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: பிரதமர் மோடி உறுதி
UPDATED : பிப் 10, 2024 06:16 PM
ADDED : பிப் 10, 2024 05:51 PM

புதுடில்லி: ‛‛ அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்'' என பிரதமர் மோடி கூறினார்.
பார்லிமென்ட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று லோக்சபாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். 17வது லோக்சபாவின் கடைசி நாள் இன்று ஆகும்.
பிரதமர் மோடி பேசியதாவது:
முக்கிய முடிவுகள்
17வது லோக்சபாவில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. சீர்திருத்தம், செயல்பாடு போன்றவற்றை நமது கண்முன்னே பார்த்து கொண்டு உள்ளோம். சீர்திருத்தம் செயலாக்கம் மீட்டுருவாக்கமே எங்களது தாரக மந்திரம் தங்களது பங்களிப்பை செலுத்திய அனைத்து எம்.பி.,க்களுக்கு நன்றி. கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய முடிவுகளை அரசு எடுத்துள்ளது. சீர்திருத்தம், செயல்பாடு மாற்றம் கொண்டதாக கடந்த 5 ஆண்டுகளில் நாடு இருந்துள்ளது.
வளர்ச்சி
மிகவும் கடினமான காலகட்டங்களில் சபாநாயகர் அவையை வழி நடத்தினார். ஒரு போதும் அதன் பணியை தடைபடவிட்டதில்லை. உலகையே அச்சுறுத்திய கோவிட்டை நாம் எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளோம். அப்போதும் கூட நாட்டின் வளர்ச்சி தடைபடவில்லை. கோவிட் காலத்தில் எம்.பி.,க்கள் தங்களது சம்பளத்தில் 30 சதவீதம் குறைத்துக் கொண்டனர்.
உலகின் கவனம்
ஜி20 மாநாட்டிற்கு தலைமை ஏற்கும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்தது. அதன் மூலம் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் அடையாளம், திறன்களை உலகிற்கு முன்பு பறைசாற்றும் வாய்ப்பு உருவானது. ஜி20 மாநாடு வெற்றி பெற ஒவ்வொரு மாநிலமும் தங்களது பங்களிப்பை வழங்கின. இந்த மாநாடு மூலம் உலகின் கவனத்தை இந்தியா ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டை போல் ஜி20 சபாநாயகர்கள் மாநாடும் நடந்தது.
நன்மதிப்பு
ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உருவெடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டில் நாட்டிற்கு புதிய பார்லிமென்ட் கிடைத்துள்ளது. அதில், செங்கோல் நிறுவப்பட்டது. புதிய பார்லி.,க்கு வரவேற்பு கிடைத்துள்ளது. பார்லி., நூலகத்தை அனைவருக்கும் அனுமதித்து சிறப்பான சேவையை ஆற்றி உள்ளீர்கள். இந்தியா மீதான உலக நாடுகளின் நன்மதிப்பு அதிகரித்து உள்ளது.
உறுதி
17 வது லோக்சபாவின் செயல்பாடு 97 சதவீதமாக உள்ளது. 18 வது லோக்சபாவின் செயல்பாடு 100 சதவீதமாக இருக்க வேண்டும் என உறுதி ஏற்போம். 100 சதவீதம் முழு அர்ப்பணிப்புடன் மக்களுக்கு பணியாற்ற உறுதி ஏற்போம்.
நியாயம்
ஒரு தேசத்திற்கு இரண்டு அரசமைப்பு சட்டங்கள் இருக்கக்கூடாது. காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சட்ட அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு நீண்ட காலமாக காத்திருக்க வைக்கப்பட்டது. இச்சட்டம் நீக்கப்பட்டு காஷ்மீர் மக்களுக்கு சமூக நீதி வழங்கப்பட்டு உள்ளது. நியாயம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
பயங்கரவாதம் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இதனால் ஏராளமானோர் இன்னுயிரை இழக்க நேரிட்டது. பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டது.
மகளிருக்கு நீதி
மகளிருக்கு மரியாதை அளிப்பதற்கான வரலாற்று சிறப்பு மிக்க முடிவும் 17 வது லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாமூலம் வரும் காலத்தில் ஏராளமான பெண்கள் அமரும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
முத்தலாக் மூலம் இஸ்லாமிய பெண்கள் துயரங்களை அனுபவித்தனர். முத்தலாக் தடை சட்டமும் இந்த அவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இஸ்லாமிய பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டு உள்ளது.
சவால்
அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு சவாலானது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். கடந்த 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்காக பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்பட்டது.
விண்வெளித்துறையில் பல சீர்த்திருத்தங்கள் செய்திருக்கிறோம். பொதுமக்களின் வாழ்க்கைக்கு அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. 70க்கும் மேற்பட்ட தேவையில்லாத சட்டங்களை நீக்கியுள்ளோம். தரவுகளை பாதுகாக்க புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கண்டுப்பிடிப்புகளை ஊக்குவிக்கும் அளவில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சீர்திருத்தம்
விண்வெளித்துறையில் வல்லரசு நாடுகளுக்கே இஸ்ரோ சவால் விடுக்கிறது. கடல், விண்வெளி மற்றும் சைபர் ஆகிய 3 வளங்களை நாட்டின் வளர்ச்சிக்காக இந்தியா பயன்படுத்துகிறது. வான்வெளி ஆய்வுகள் ஊக்குவிக்கப்படும் வகையில் சீர்திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
நம்பிக்கை
பாரதத்தின் பெருமைகளை உலகம் பார்க்க துவங்கி விட்டது. இது தொடர வேண்டும். இளைஞர்கள் மத்தியில் புது உத்வேகம் பிறந்துள்ளது. நாட்டின் இளைஞர் சக்தி மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு முறையும் எதிர்ப்பு கிளம்பும்போதுதான் எனக்குள் செயல்வேகத்திற்கான சக்தி மேலும் அதிகரிக்கிறது.
பெருமை
தேர்தல் நெருங்க நெருங்க சிலருக்கு பதற்றம் ஏற்படுகிறது. ஆனால், இது ஜனநாயகத்தில் இன்றியமையாத அம்சமாகும். அதை நாம் அனைவரும் பெருமையுடன் எதிர்கொள்கிறோம். நமது தேர்தல்கள் நாட்டின் பெருமையை அதிகரிக்கும். உலகையே வியப்பில் ஆழ்த்தும் ஜனநாயக பாரம்பரியத்தை பின்பற்றும் என்று நம்புகிறேன்.
ராமர் கோவில் தொடர்பான லோக்சபாவின் தீர்மானம் வருங்கால சந்ததியினருக்கு நாட்டின் மாண்புகளைப் பற்றி பெருமிதம் கொள்ள அரசியலமைப்பு பலத்தை அளிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.