பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் தலைவணங்காது; மோடி திட்டவட்டம்
பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் தலைவணங்காது; மோடி திட்டவட்டம்
ADDED : நவ 25, 2025 07:13 PM

குருசேத்திரம்: ''பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் தலைவணங்காது என்பதை உலக நாடுகள் பார்த்தன,'' என பிரதமர் மோடி கூறினார்.
சீக்கிய மத குரு தேஜ் பஹதூரின் சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிடும் விழா ஹரியானாவின் குருசேத்திரத்தில் நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
இன்று இந்தியாவின் பாரம்பரியத்தின் அற்புதமான நாள். காலை அயோத்தியில் இருந்தேன். மாலை, பகவத் கீதை நகரமான குருசேத்திரத்தில் இருக்கிறேன். ஸ்ரீ குரு தேஜ் பகதூரின் 350வது தியாக நாளில் நாம் அனைவரும் இங்கு அஞ்சலி செலுத்துகிறோம். இந்த நிகழ்வில் நம்மிடையே இருக்கும் அனைத்து துறவிகளுக்கும் மரியாதை செலுத்துகிறேன்.
2019 நவ.,9 ல் ராமர் கோவில் குறித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கிய போது நான் கர்தார்பூர் காரிடரில் உள்ள தேரா பாபா நானக் துவக்க விழாவில் இருந்தேன். ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற கோடிக்கணக்கான மக்களின் விருப்பம் நிறைவேற வேண்டும் என வேண்டிக் கொண்டேன். அந்த வேண்டுதல் நிறைவேறியுள்ளது. அன்றே, ராமர் கோவிலுக்கு ஆதரவான தீர்ப்பு வந்தது.
இன்று அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்றப்பட்ட நிலையில், சீக்கிய சமூகத்தினரிடம் இருந்து ஆசிகளை பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. சிறிது நேரத்துக்கு முன்பு, குருசேத்திரத்திர மண்ணில் பாஞ்சஜன்ய நினைவுச்சின்னம் திறக்கப்பட்டது. குருசேத்திர மண்ணில் நின்று தான், பகவான் கிருஷ்ணர் உண்மை மற்றும் நீதியைப் பாதுகாப்பதே மிகப்பெரிய மதம் என அறிவித்தார்.
குரு தேஜ் பகதூரும் உண்மை , நீதி மற்றும் நம்பிக்கையை பாதுகாப்பதே தனது மதமாக கருதினார். அதற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
நாம் அமைதியையே விரும்புகிறோம். பாதுகாப்பில் சமரசத்தை அல்ல. இதற்கு சிறந்த உதாரணம் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை. பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் தலை வணங்காது அல்லது பயப்படாது என்பதை உலக நாடுகள் பார்த்தன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

