பயங்கரவாத குழுக்கள் இடையே மோதல் வியூகத்தை மாற்றுகிறது இந்திய ராணுவம்
பயங்கரவாத குழுக்கள் இடையே மோதல் வியூகத்தை மாற்றுகிறது இந்திய ராணுவம்
ADDED : ஏப் 01, 2025 09:14 PM
புதுடில்லி:பாகிஸ்தானில் இருந்து ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவும் ஜெய்ஷ் - இ - முகமது மற்றும் லஷ்கர் பயங்கரவாத குழுக்களுக்கு இடையே கருத்து முரண்பாடு தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, பயங்கரவாத தடுப்பு உத்திகளை நம் ராணுவம் மறுசீரமைப்பு செய்து வருகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் முழு ஆதரவுடன், ஜெய்ஷ் - இ - முகமது மற்றும் லஷ்கர் பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களின் உதவியுடன் அவர்கள் ஜம்மு - காஷ்மீருக்குள் ஊடுருவுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக இந்த இரு பயங்கரவாத குழுக்கள் இடையே சித்தாந்த அடிப்படையிலான கருத்து முரண் ஏற்பட்டதாக நம் உளவுத்துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.
தெற்காசியாவில் நடத்தப்படும் தாக்குதல் விவகாரத்தில் அவர்கள் இடையே கருத்து முரண் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அவர்கள் இணைந்து செயல்படுவதில்லை என்றும் தெரிகிறது. அவர்களை சமாதானப்படுத்த பாக்., ராணுவம் செய்த முயற்சி பலன் அளிக்கவில்லை.
இதையடுத்து, அதிக எண்ணிக்கையிலான ஜெய்ஷ் பயங்கரவாதிகளை நம் பகுதிக்குள் ஊடுருவ பாக்., ராணுவம் உதவியுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதன் காரணமாக, ஜம்மு - காஷ்மீருக்குள் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் குறித்து பரஸ்பரம் அவர்களே மாறி மாறி நம் உளவுத்துறையிடம் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதனால், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை உத்திகளில் நம் ராணும் பல மற்றங்களையும், மறுசீரமைப்புகளையும் செய்வதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.