லடாக் எல்லையில் ரோந்து பணியை துவக்கியது இந்திய ராணுவம்
லடாக் எல்லையில் ரோந்து பணியை துவக்கியது இந்திய ராணுவம்
ADDED : நவ 01, 2024 03:47 PM

புதுடில்லி: எல்லையில் ரோந்து பணி தொடர்பாக சீன ராணுவத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து படைகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், லடாக் எல்லையில் அமைந்துள்ள டெம்சோக் பகுதியில் இந்திய ராணுவம், ரோந்து பணியை துவக்கியது. பெட்சாங் பகுதியில் விரைவில் இந்த பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு லடாக்கில், 2020ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே உறவு முற்றிலும் சீர்குலைந்தது. பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை இருநாட்டு அரசுகளும் தொடர்ந்து மேற்கொண்டன. ராணுவ அதிகாரிகள் தொடர் பேச்சு நடத்தினர். அதனால், சில நாட்களுக்கு முன்னர் படைகள் ரோந்து செல்வது தொடர்பாக இரு நாட்டு ராணுவத்தினர் இடையே உடன்பாடு ஏற்பட்டது. படைகளை திரும்ப பெற்றுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ், கிழக்கு லடாக்கின் டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் படையினர் வாபஸ் பெறப்பட்டனர். இது சுமூகமாக முடிந்தது. ரோந்து முறைகள் தொடர்பாக கீழ்மட்ட தளபதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.எல்லையில் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரு நாட்டு படையினரும் எல்லையில் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
இந்நிலையில், டெம்சோக் செக்டார் பகுதியில் இந்திய ராணுவத்தினர் ரோந்து பணியை துவக்கினர். பெட்சாங் பகுதியில் விரைவில் ரோந்து பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.