குடியரசு தின அணிவகுப்பு: இந்தியாவில் தயாரான ஆயுதங்களை காட்சிப்படுத்த ராணுவம் முடிவு
குடியரசு தின அணிவகுப்பு: இந்தியாவில் தயாரான ஆயுதங்களை காட்சிப்படுத்த ராணுவம் முடிவு
ADDED : ஜன 13, 2024 01:41 PM

புதுடில்லி: வரும் 26ம் தேதி நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில், இந்தியாவில் தயாரான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை காட்சிப்படுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது.
ஆண்டுதோறும் ஜன.,26 ம் தேதி டில்லியில் கடமைப்பாதையில் நடக்கும் குடியரசு தின விழாவில் மத்திய அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் சாகசங்கள் உள்ளிட்டவற்றுடன் மாநிலங்களின் கலை, கலாசாரத்தை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகள் ஊர்வலம் நடப்பது வழக்கம்.
அந்த வகையில், வரும் 26ம் தேதி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை, அணிவகுப்பில் காட்சிப்படுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது.
எல்சிஎச் பிரசாந்த் ஹெலிகாப்டர், பினாகா மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர் மற்றும் நாக் ஏவுகணை ஆகியவை குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
அதில் எல்சிஎச் பிரசாந்த் ஹெலிகாப்டர், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும். எச்ஏஎல் நிறுவனம் இதனை உருவாக்கி உள்ளது. தரைவழி மற்றும் வான்வழியாக தாக்கும் திறன் கொண்டது. வலுவான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இந்த ஹெலிகாப்டர் மூலம் இரவிலும் தாக்குதல் நடத்த முடியும்.
‛நாக்' ஏவுகணையானது, டிஆர்டிஓ அமைப்பால் உருவாக்கப்பட்டது. பகல் மற்றும் இரவு நேரங்களில் எதிரிகளின் டாங்குகளை தாக்கும் திறன் கொண்டது. அதிநவீன வசதிகளும் உள்ளன.
இவற்றை தவிர்த்து, இந்திய தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட நவீன கவச வாகனங்கள் மற்றும் சிறப்பு வாகனங்கள், இலகுரக ராணுவ சிறப்பு வாகனங்கள் அதிவிரைவு எதிர் தாக்குதல் நடத்தும் வாகனங்கள் ஆகியவற்றையும் காட்சிப்படுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது. இந்தாண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்க உள்ளார்.