UPDATED : நவ 18, 2025 12:22 AM
ADDED : நவ 18, 2025 12:05 AM

ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள மதீனா அருகே, பஸ் - டேங்கர் லாரி மோதி தீப்பிடித்த விபத்தில், 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்ட இவர்கள் அனைவரும் ஹைதராபாதை சேர்ந்தவர்கள்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 54 பேர், மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு புனித யாத்திரை சென்றனர். மெக்காவில் இருந்து மதீனாவுக்கு நேற்று முன்தினம் இரவு, 46 பேர் பஸ் மூலம் திரும்பிக் கொண்டிருந்தனர். மதீனாவிலிருந்து 25 கி.மீ. தொலைவில், டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரியும், இந்த பஸ்சும் நேருக்கு நேர் மோதியதில், பஸ் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.
புனித பயணம்
இந்த விபத்தில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக தப்பி, சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 45 பேரும் உயிரிழந்து விட்டதாக, சவுதி அரேபியா போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜானர் கூறியதாவது:
ஹைதராபாதில் இருந்து 54 பேர் 9ம் தேதி ஜெட்டா சென்றனர். அவர்கள் 23ல் நாடு திரும்புவதாக இருந்தது. மதீனாவுக்கு நான்கு பேர் காரில் சென்றனர். நான்கு பேர் மெக்காவிலேயே தங்கி விட்டனர். 46 பேர் பஸ்சில் சென்றபோது விபத்து நடந்தது. ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார்.
இவ்வாறு கமிஷனர் கூறினார்.
அதிகாலை என்பதால், அனைவரும் துாங்கி கொண்டிருந்ததால் தப்பிக்க முடியவில்லை. இறந்தவர்களில் 11 பெண்கள், 10 குழந்தைகள் அடங்குவர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவ ரியாத்தில் உள்ள இந்திய துாதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துாதரக அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. விபத்து குறித்து பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்; அமைச்சர் அசாருதீன் தலைமையிலான குழு சவுதி செல்கிறது என தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.
தீ விபத்து என்பதால், உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனை தேவைப்படலாம்; பெரும்பாலான உடல்கள் சவுதி அரேபியாவிலேயே அடக்கம் செய்யப்படும் என்றும் தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.

