வெளிநாட்டு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: ஊழியர்களை மீட்டது இந்திய கடற்படை
வெளிநாட்டு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: ஊழியர்களை மீட்டது இந்திய கடற்படை
UPDATED : மார் 08, 2024 06:11 AM
ADDED : மார் 08, 2024 12:53 PM

புதுடில்லி: இந்திய பெருங்கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா விமானத்தை ஏவி ஹவுதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் பார்படாஸ் நாட்டு கப்பலில் தீப்பற்றியது. இதில் சிக்கிய பணியாளர்களை நம் கடற்படையின், ஐ.என்.எஸ்., கோல்கட்டா போர் கப்பல் பத்திரமாக மீட்டது.
இஸ்ரேலின் தாக்குதல்
மத்திய கிழக்கு நாடான ஏமனை மையமாக வைத்து ஹவுதி பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து, செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா வழியாக செல்லும் சர்வதேச சரக்கு கப்பல்களை தாக்கி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக செங்கடல் பகுதி வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ட்ரோன் மற்றும் வெடிபொருட்கள் நிரப்பிய படகுகள் ஆகியவற்றின் வாயிலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏமன் மற்றும் சோமாலியா நாடுகளுக்கு இடையே உள்ள ஏடன் வளைகுடாவில், பார்படாஸ் நாட்டின் 'ட்ரூ கான்பிடன்ஸ்' எனும் சரக்கு கப்பல் நேற்று முன்தினம் பயணித்தது.
இந்த கப்பல், சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பல் மீது ட்ரோன் வாயிலாக குண்டுகள் வீசப்பட்டன. இதில் கப்பல் தீப்பிடித்தது. அதில் இருந்த பணியாளர்களில் சிலர் படுகாயமடைந்தனர்.
சந்தேகம்
இது குறித்து கப்பலின் கேப்டன், அப்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த இந்தியாவின் ஐ.என்.எஸ்., கோல்கட்டா போர் கப்பலுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் விரைந்து சென்று, தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் சிக்கிய இருந்த இந்தியர் ஒருவர் உட்பட, 21 பணியாளர்களை பத்திரமாக மீட்டனர். ஹவுதி பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து இந்திய கடற்படை செய்தித்தொடர்பாளர்கள் கூறுகையில், 'தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்து உதவி கோரப்பட்ட உடன், ஐ.என்.எஸ்., கோல்கட்டா போர் கப்பல் விரைந்து செயல்பட்டு, சம்பவ இடத்திற்கு சென்று பணியாளர்களை மீட்டது.
'காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ஹெலிகாப்டர் வாயிலாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்' என கூறினார்.

