ஈரான் கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்: கப்பலை அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை
ஈரான் கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்: கப்பலை அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை
ADDED : ஜன 29, 2024 11:55 PM

புதுடில்லி: சோமாலியா கிழக்கு கடற்கரை பகுதியில், ஈரான் கொடியுடன் சென்ற மீன்பிடிக் கப்பலை கடற்கொள்ளையர் கடத்தினர். அந்த கப்பலில் இருந்தவர்கள் உதவி கோரியதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற நம் கடற்படையின் போர்க்கப்பல், கொள்ளையரிடம் இருந்து கப்பல் மற்றும் பணியாளர்களை பாதுகாப்பாக காப்பாற்றியது.
சோமாலியா கிழக்கு கடற்கரை பகுதியில், ஈரான் கொடியுடன், 17 பேருடன் மீன்பிடிக் கப்பல் சென்றது. அப்போது அங்கு வந்த கடற்கொள்ளையர், கப்பலை கடத்தியதுடன், அதிலிருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.
அவர்கள் அவசர உதவி கோரியதை அடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, நம் விமானப்படையின் ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பல், சம்பவ இடத்துக்கு விரைந்து, கடற்கொள்ளையரிடம் இருந்து கப்பல் மற்றும் அதிலிருந்தவர்களை காப்பாற்றியது.
இதுகுறித்து, நம் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் நேற்று கூறியதாவது:
சோமாலியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில், கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கைகளில், ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பல் ஈடுபட்டது. அப்போது, ஈரான் கொடியுடன் சென்ற மீன்பிடிக் கப்பல் கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது.
இதன்படி, சம்பவ இடத்துக்கு விரைந்த ஐ.என்.எஸ்., சுமித்ரா போர்க்கப்பலில் இருந்த அதிகாரிகள், கப்பலையும், அதிலிருந்த 17 பேரையும் பாதுகாப்பாக காப்பாற்றினர்.
இவ்வாறு அவர் கூறினார்.