UPDATED : ஜூலை 22, 2025 11:26 AM
ADDED : ஜூலை 22, 2025 10:55 AM

புதுடில்லி: ரயில்வே பாதுகாப்பு பணியை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
ரயில்வே அமைச்சக தரப்பில் கூறப்படுவதாவது:ரயில் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்த இந்திய ரயில்வே ஒரு பெரிய நடவடிக்கையை எடுக்க உள்ளது. ரயில் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பை தனியார் கைகளிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ரயில்களில் சட்ட விரோத பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு விரும்புகிறது.
விமான நிலையங்களில் உள்ளதை போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில் நிலையங்களிலும் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அதிகரிக்கும் கடத்தலை தடுக்க.,
ரயில்கள் வழியாக கடத்தலைத் தடுக்கவும், பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தவும் இந்திய ரயில்வே, சோதனை அடிப்படையில் இரண்டு நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகர், லக்னோ கோமதி நகர் ரயில் நிலையங்கள் உட்பட இரண்டு நிலையங்களில் தனியார் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் வெளியான பிறகு, மற்ற நிலையங்கள் பரிசீலிக்கப்படும். இது வெற்றியடைந்தால், நாட்டின் பிற முக்கிய நிலையங்களிலும் இந்த முறை செயல்படுத்தப்படும்.
ஏற்கனவே பல வசதிகளை மத்திய அரசு அவுட்சோர்ஸ் செய்துள்ளது. இதில் ஹவுஸ்கீப்பிங், கேட்டரிங் போன்றவை அடங்கும், இதனால் பயணிகள் சிறந்த சேவைகளைப் பெற முடியும் என அரசு நம்புகிறது. உதாரணம் ரயில் நிலையங்கள் முன்பை விட தற்போது சுத்தமாக மாறி வருவதை காண முடிகிறது.
தனியார் வசம் ஒப்படைக்கும் போது, பாதுகாப்பு பணியாளர்கள் ஸ்கேனிங் மற்றும் பயணியர்கள் மீதான கவனிப்பு மற்றும் நெரிசலை ஒழுங்குப்படுத்துதல் பணியில் ஈடுபடுவர்.
நடைமுறைக்கு வரும் போது ரயில்வே பாதுகாப்பு படை (RPF) வீரர்கள் தங்கள் கடமைகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.