ADDED : செப் 27, 2024 08:20 AM

பெங்களூரு: ''அரசியல் கட்சி போல செயல்படாதீர்கள்,'' என, இந்திய சாலை காங்கிரசுக்கு, நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி அறிவுரை கூறி உள்ளார்.
இந்தியாவின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப அம்சங்களின் வழிகாட்டுதல்களை, ஐ.ஆர்.சி., எனும் இந்திய சாலை காங்கிரஸ் வழங்கி வருகிறது. இந்த அமைப்பு சார்பில், பெங்களூரில் நேற்று அட்வான்ஸ் இன் பிரிட்ஜ் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது.
இதில், நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
இந்திய சாலை காங்கிரஸ் ஒரு தொழில்முறை அமைப்பு. சில நேரங்களில் நீங்கள் ஒரு அரசியல் கட்சி போல செயல்படுகிறீர்கள். அப்படி செயல்பட வேண்டாம். 90 ஆண்டு பழமையான அமைப்பான நீங்கள், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப அம்சங்களுக்கான அறிவு இயந்திரமாக இருக்கலாம்.
நீங்கள் ஆய்வகங்களுடன் நிரந்தர அலுவலகம் வைத்து கொள்ள வேண்டும். ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்களை முழுநேர பணியில் நியமித்து, அவர்களின் அனுபவத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
உங்களுக்கு அலுவலகம் அமைக்க நிலம், நிதி தேவைப்பட்டால் செய்து தருகிறேன். ஆனால் நீங்கள் சுதந்திரமான, பாரபட்சமற்ற, நியாயமான அமைப்பாக இருக்க வேண்டும். தரமான பணிகள் செய்யப்பட வேண்டும் என்றால், அரசு கட்டமைப்பில் சுதந்திரமாக இருப்பது மிகவும் முக்கியம். இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு வல்லுனர்கள் குறிப்பிடக்கூடிய சிறந்த உதாரணங்களில் ஒன்றாக, மும்பை - ஒர்லி கடல் இணைப்பு சாலை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.