இந்திய தொழில்நுட்பம் சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும்; அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை
இந்திய தொழில்நுட்பம் சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும்; அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை
ADDED : ஜூலை 04, 2026 08:40 PM

காந்திநகர்: இந்திய தொழில்நுட்பம் சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் என்று குஜராத்தில் செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் சனந்த் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த ஆலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் சிப்புகள் ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது; இத்திட்டத்தின் விரைவான செயல்பாட்டிற்கு மத்திய அரசின் உறுதியான தொலைநோக்குப் பார்வையே காரணம். இது ஒரு சமயத்தில் சாத்தியமற்ற ஒன்றாக பார்க்கப்பட்டது. ஆனால் நமது தலைமையின் தைரியமான உறுதியால் இன்று நனவாகியுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த சிப்புகள் கார்கள், ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் பல்வேறு தொழில்துறை மின்னணு பயன்பாடுகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் சிப்புகள் ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்திய தொழில்நுட்பம் உலகளாவிய பாராட்டைப் பெறும், இவ்வாறு அவர் கூறினார்.
