மிக இளவயதில் தென் துருவத்தை அடைந்து இந்தியர் சாதனை: இளம்பெண்ணுக்கு கடற்படை பாராட்டு
மிக இளவயதில் தென் துருவத்தை அடைந்து இந்தியர் சாதனை: இளம்பெண்ணுக்கு கடற்படை பாராட்டு
UPDATED : டிச 30, 2025 08:51 PM
ADDED : டிச 30, 2025 08:13 PM

புதுடில்லி: இந்திய கடற்படை அதிகாரியின் 18 வயதான மகள், காம்யா கார்த்திகேயன், மிக இளம் வயதில் தென் துருவத்தை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார். அவருக்கு இந்திய கடற்படை பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படை அதிகாரியான கார்த்திகேயனின் மகளான இவர் மும்பையில் உள்ள கடற்படை பள்ளியில் படித்தவர் ஆவார். மலையேற்றத்தில் அவருக்கு ஆர்வம் அதிகம். தற்போது 18 வயதாகும் காம்யாவின் மலையேற்ற பயணம், கடந்த 2017 ம் ஆண்டு ஆப்ரிக்காவில் உள்ள கிளிமாஞ்சாரோ மலையில் ஏறுவதன் மூலம் துவங்கியது. அங்கிருந்து ஐரோப்பாவின் எல்ப்ரஸ் மலை சிகரம்(2018), ஆஸ்திரேலியாவின் உள்ள கோசியுஸ்கோ மலை சிகரம்(2019), தென் அமெரிக்காவில் உள்ள அகோன்காகுவா மலை சிகரம்(2020), வட அமெரிக்காவில் உள்ள டெனாலி மலை சிகரம்(2021), எவரெஸ்ட் சிகரம் (2023), ஆண்டார்டிகாவின் உள்ள வின்சன் மலை சிகரத்தில்(2024) ஏறி சாதனை படைத்து இருந்தார். இதற்கு இந்திய கடற்படை கடந்த ஆண்டு பாராட்டு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இவர் அடுத்ததாக தென் துருவத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார். தற்போது 18 வயதாகும் இவருக்கு, மிக இளம் வயதில் தென் துருவத்தை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அவரை பாராட்டி இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தென் துருவத்தை எட்டிய முதல் இளம் இந்தியர் மற்றும் உலகளவில் இரண்டாவது இளம்பெண் என்ற மற்றொரு சாதனையை படைத்த இந்திய கடற்படை அதிகாரி கார்த்தகேயனின் மகளும், கடற்படை குழந்தைகள் பள்ளியின் முன்னாள் மாணவியான காம்யாவுக்கு இந்திய கடற்படை பாராட்டு தெரிவித்து கொள்கிறது.மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் கடுமையான வானிலையை தாங்கி பலத்த காற்றுடன் சுமார் 60 கடல் மைல்கள் தூரம் நடந்து சென்று தனது முழு பயண சுமையை இழுத்துக்கொண்டு டிச., 27 ல் தென் துருவத்தை அடைந்தார். காம்யாவின் அசாதாரண சாதனை, அவரது தலைமுறையைச் சேர்ந்த பலரை தங்கள் எல்லைகளைத் தாண்டி முன்னேறத் தூண்டும் என்பது உறுதி. வடக்கு துருவத்தை கைப்பற்றும் இறுதி மைல்கல்லை அடைய அவரை இந்திய கடற்படை வாழ்த்துகிறது . இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

