அமெரிக்காவில் இருந்து பனாமாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள்
அமெரிக்காவில் இருந்து பனாமாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள்
ADDED : பிப் 21, 2025 01:08 AM
பனாமா :அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை அந்நாடு அண்டை நாடான பனாமாவுக்கு நேற்று அனுப்பி வைத்தது.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை கண்டறிந்து அவர்களின் நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணியில் டிரம்ப் அரசு தீவிரமாக உள்ளது.
இந்தாண்டில் மட்டும் இதுவரை மூன்று கட்டங்களாக 332 இந்தியர்கள் நம் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நேரடியாக அவரவர் நாட்டுக்கு அனுப்புவதில் சிக்கல்களை சந்திப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. அதன் காரணமாக அண்டை நாடுகளான பனாமா, கவுதமாலா, கோஸ்டா ரிக்கா ஆகியவற்றை, 'டிரான்சிட்' எனப்படும் பயணியர் பரிமாற்ற நாடுகளாக பயன்படுத்துகிறது.
இதற்கு அந்நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இந்த நடைமுறைக்கு ஆகும் செலவை முழுமையாக அமெரிக்கா செலுத்திவிடும்.
இந்நிலையில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த 299 பேர் நேற்று பனாமாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த குழுவில் இந்தியர்களும் உள்ளனர்.
பனாமாவில் தரையிறங்கிய 299 பேரில் 171 பேர் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப ஒப்புக்கொண்டுள்ளனர். சொந்த நாட்டிற்கு திரும்ப மறுத்த 98 பேர் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அடுத்த கட்டமாக சட்டவிரோதமாக தங்கியுள்ள மற்றொரு குழுவினருடன் ஒரு விமானம் அமெரிக்காவில் இருந்து கோஸ்டாரிகாவுக்கு நாளை செல்கிறது. அதிலும் இந்தியர்கள் அடங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.