ADDED : ஜூலை 12, 2025 01:48 AM

புதுடில்லி: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இஸ்ரோ அளித்த சிறப்பு விருந்தில் அங்கிருந்தவர்களுக்கு நம் நாட்டு கேரட் அல்வாவை பரிமாறினார்.
'ஆக்சியம் - -4' திட்டத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கி விட்சன் ஆகியோர் கடந்த மாதம் 25-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
விண்வெளியில் விவசாயம் செய்வது, மனித செரிமான அமைப்பு விண்வெளியின் தனித்துவமான சூழலுக்கு எவ்வாறு பொருந்துகிறது என பல்வேறு ஆய்வுகளை சுக்லா மேற்கொண்டார். வரும் 14ம் தேதி, சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் பூமிக்கு திரும்புகின்றனர்.
அதற்கு முன்னதாக விண்வெளியில் சமையல் மற்றும் கலாசார பரிமாற்றமாக விருந்து அளிக்கப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தால் இந்த சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில், இறால், சிக்கன், இனிப்பு ரொட்டி உள்ளிட்ட உணவு வகைகள் இடம்பெற்றிருந்தன. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் தன் சக தோழர்களுக்காக கேரட் அல்வாவை பரிமாறினார்.
இதை, அவர் தன் வீட்டில் சமைத்து உடன் எடுத்து சென்றிருந்தார். நுண் ஈர்ப்பு விசைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட இந்திய உணவு வகைகளை விண்வெளி பயணங்களில் கொண்டு சென்று பழக்கப்படுத்துவது, சர்வதேச ஒத்துழைப்பில் வளர்ந்து வரும் பங்கை காட்டுவதாக இஸ்ரோ தெரிவித்தது.