மிசோரமில் பிறந்தது GEN BETA தலைமுறையின் முதல் குழந்தை!
மிசோரமில் பிறந்தது GEN BETA தலைமுறையின் முதல் குழந்தை!
ADDED : ஜன 05, 2025 09:27 PM

அய்ஸ்வால்; இந்தியாவில் ஜெனரேஷன் பீட்டா தலைமுறையின் முதல் குழந்தை மிசோரமில் பிறந்துள்ளது.
தலைமுறைகளினால் பின்னி பிணைந்தது தான் உலகம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தலைமுறைகளை எளிதாக அடையாளம் காண காலச்சூழலுக்கு ஏற்ப பெயர்கள் சூட்டப்படுகின்றன. அவர்களை எளிதில் அடையாளப்படுத்தவும், மற்றவர்கள் புரிந்து கொள்ளவும் இந்த தலைமுறை பெயர்கள் உதவுகின்றன.
குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஜனிக்கும் தலைமுறைகளுக்கு பெயர் வைப்பது 1901ம் ஆண்டில் இருந்து வழக்கத்தில் இருக்கிறது. 1901ம் ஆண்டு முதல் 1927 வரை பிறந்தவர்கள் கிரேட்டஸ் தலைமுறை, 1928ம் ஆண்டு முதல் 1945 வரை அமைதியான தலைமுறையினர், 1946 முதல் 1964 வரை பிறந்தவர்கள் பேபி பூமர்ஸ் தலைமுறையினர், 1965 முதல் 1980க்குள் பிறந்தவர்கள் ஜெனரேஷன் எக்ஸ்(generation x) தலைமுறையினர் என வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
1981ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுகள் தலைமுறைக்கு மில்லினியல்கள் (millennials) என்று பெயர். 1997ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு தலைமுறை ஜெனரேஷன் இசட் (generation Z)என்று அழைக்கப்படுகிறது.
2010-2024ஆண்டுகால இடைவெளியில் பிறந்த தலைமுறை ஜெனரேஷன் ஆல்பா (generation alpha). இவர்கள் டிஜிட்டல் உலகத்தை அதிகம் சார்ந்து வளரும் சமூகத்தினர் ஆவார்கள். கிட்டத்தட்ட 200 கோடி பேர் இந்த தலைமுறையின் கீழ் வருகின்றனர் என்பது ஆச்சரியமான ஒன்று.
அந்த வகையில் அடுத்து வரக்கூடிய தலைமுறை தான் ஜெனரேஷன் பீட்டா (generation beta). இந்த தலைமுறை குழந்தைகள் 2025ம் ஆண்டு - 2039ம் ஆண்டு வரை பிறப்பவர்கள். இவர்கள் ஸ்மார்ட் போன்கள், கணினிகள், ரோபோக்கள் என தொழில்நுட்ப விஷயங்கள் கொட்டிக்கிடக்கும் உலகில் வாழ்க்கையை நகர்த்துபவர்கள்.
இப்படி நவீனயுக சவால்களை சந்திக்க காத்திருக்கும் பீட்டா தலைமுறையின் முதல் குழந்தை இந்தியாவில் மிசோரம் மாநிலத்தில் பிறந்துள்ளது. ஜனவரி 1ம் தேதி புத்தாண்டன்று மிசோரம் தலைநகர் அய்ஸ்வாலில் உள்ள அரசு மருத்துவமனையில் நள்ளிரவு சரியாக 12.03 மணிக்கு பிறந்து இருக்கிறது.
டிசம்பர் 31ம் தேதி மதியம் 3 மணி முதல் மறுநாள் (ஜன.1) அதிகாலை 7 மணி வரை மொத்தம் 36 குழந்தைகள் பிறந்துள்ளன. முதல் குழந்தை ஜன. 1ம் தேதி நள்ளிரவு 12.03க்கும், 2வது குழந்தை டர்ட்லாங் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் 12.35க்கும் பிறந்துள்ளது.
Generation beta முதல் குழந்தைக்கு 'ப்ரான்கி ரெம்ருவாடிகா சடெங்' (Frankie Remruatdika Zadeng)என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. 7வது தலைமுறையான பீட்டாவின் முதல் குழந்தைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

