தனியார் துறையில் ராணுவ விமானம் உற்பத்தி: முதல் ஆலை குஜராத்தில் திறப்பு
தனியார் துறையில் ராணுவ விமானம் உற்பத்தி: முதல் ஆலை குஜராத்தில் திறப்பு
ADDED : அக் 28, 2024 01:27 PM

வதோதரா: குஜராத்தில் டாடா - ஏர்பஸ் விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்ஜெஷ் இணைந்து தொடங்கி வைத்தனர்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்ஜெஷ் முதல்முறையாக 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், மக்களின் பிரமாண்ட வரவேற்புடன், இருவரும் திறந்தவெளி ஜீப்பில் டி.ஏ.எஸ்.எல். வளாகத்திற்கு வந்தடைந்தனர்.
அங்கு, டாடா - ஏர்பஸ் விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்ஜெஷ் இணைந்து தொடங்கி வைத்தனர். வரும் 2026ம் ஆண்டு முதல் 40 சி-295 விமானங்கள் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதன்மூலம், ராணுவ விமானத்தை தயாரிக்கும் இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான உற்பத்தி ஆலையாக இது அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்த விமான உற்பத்தி ஆலையின் மூலம் பாதுகாப்புத்துறையின் திறன் மேம்படுத்தப்படும். இந்தியா - ஸ்பெயின் நாடுகளுக்கு இடையேயான உறவும் வலுப்படுத்தப்படும். இன்று முதல் இருநாடுகளின் கூட்டாண்மைக்கு புதிய திசையை உருவாக்கியுள்ளோம். அதுமட்டுமில்லாமல், மேக் இன் இந்தியாவுக்கும் இது வலிமை சேர்க்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
அதேவேளையில், 'இந்தியாவின் பாதுகாப்புத்துத் துறையை நவீனமயமாக்குவதற்கும், தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் இது கூடுதல் பங்களிப்பை வழங்கும். குறிப்பாக, குஜராத் இந்தியாவின் முன்னணி உற்பத்தி மையமாக திகழும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும்,' என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்ஜெஷ் கூறினார்.
டாடா - ஏர்பஸ் ஆலையின் மூலம் மொத்தம் 56 சி 295 ரக போர் விமானங்கள் தயார் செய்யப்பட இருக்கிறது. அதில், 16 விமானங்கள் ஸ்பெயினில் இருந்து டெலிவரி செய்யப்படும். எஞ்சியுள்ள 40 போர் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கிறது.