இங்கிலாந்துக்கு எதிரான முதல் 'டி-20' : இந்தியா அபார வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 'டி-20' : இந்தியா அபார வெற்றி
ADDED : ஜன 22, 2025 10:43 PM

கோல்கட்டா : அபிஷேக் சர்மா 20 பந்தில் அரைசதம் விளாச, முதல் 'டி-20' போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழலில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட் சாய்த்தார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பீல்டிங் தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணியின் பில் சால்ட் (0), டக்கெட்டை (4) 'டக்' அவுட்டாக்கினார் அர்ஷ்தீப். போட்டியின் 8வது ஓவரை வீசினார் வருண் சக்ரவர்த்தி. இதன் 3, 5வது பந்தில் ஹாரி புரூக் (17), லிவிங்ஸ்டனை (0) அவுட்டாக்கினார் வருண். கேப்டனுக்கு உரிய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர், 34 வது பந்தில் அரைசதம் எட்டினார். இவர், 68 ரன்னில் அவுட்டானார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 132 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட் சாய்த்தார்.
அபிஷேக் அசத்தல்
இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஜோடி துவக்கம் தந்தது. 5வது ஓவரை வீசிய ஆர்ச்சர், 2வது பந்தில் சாம்சனை (26) அவுட்டாக்கினார். 5வது பந்தில் சூர்யகுமாரை 'டக்' அவுட்டாக்கினார். மார்க் உட் வீசிய 6வது ஓவரில் மிரட்டிய அபிஷேக், 2 சிக்சர், 1 பவுண்டரி அடித்தார்.
அபிஷேக், 20 பந்தில் அரைசதம் கடந்தார். இவர், 79 ரன்னில் அவுட்டானர். கடைசியில் திலக் ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 12.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 'டி-20' தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. பாண்ட்யா (3), திலக் வர்மா (19) அவுட்டாகாமல் இருந்தனர்.