நியாயமான நிதி உதவி திட்டங்களுக்கு இந்தியா அடங்கிய குழு வலியுறுத்தல்
நியாயமான நிதி உதவி திட்டங்களுக்கு இந்தியா அடங்கிய குழு வலியுறுத்தல்
ADDED : நவ 14, 2024 03:10 AM
பாகு: 'பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காணும் திட்டங்களை செயல்படுத்த, நியாயமான நிதி உதவி திட்டங்களை உருவாக்க வேண்டும்' என, இந்தியா அடங்கிய குழு வலியுறுத்தியுள்ளது.
பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 2015ல் பாரிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், 195 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவது மற்றும் நாடுகளுக்கான இலக்குகளை எட்டுவது தொடர்பாக விவாதிக்கும், பருவநிலை மாறுபாடு மாநாடு, ஆசிய நாடான அஜர்பைஜானில் நடந்து வருகிறது. தங்களுக்கான இலக்குகளை எட்டுவதற்கு, வளரும் நாடுகளுக்கான நிதி இலக்குகளை நிர்ணயிப்பதே இந்தாண்டு மாநாட்டின் முக்கிய நோக்கம்.
வளர்ந்த நாடுகள் எவ்வளவு நிதி அளிக்க வேண்டும், வளரும் நாடுகளுக்கான நிதி இலக்கை நிர்ணயிப்பது தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், பல குழுக்களாக உள்ளன. அரபு குழு, ஆப்ரிக்க குழு என, பல பிராந்திய குழுக்களும் உள்ளன. எல்.எம்.டி.சி.., எனப்படும் ஒருமித்த கருத்துடைய வளரும் நாடுகள் குழுவில் இந்தியா இடம்பெற்றுள்ளது.
இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள நாடுகள் தனியாக ஆலோசனை நடத்தின. அதில், வளரும் நாடுகளுக்கு, அதன் இலக்குகளை எட்டுவதற்கு போதிய அளவில், நியாயமான நிதி உதவி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
பெரிய அளவில் பாகுபாடு இல்லாமல், அந்தந்த நாடுகளின் நிலைமைக்கு ஏற்ப இந்த உதவிகள் இருக்க வேண்டும் என, இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், இவ்வாறு வழங்கப்படும் நிதி உதவிகளில், 69 சதவீதம் கடனாக வழங்கப்படுகிறது. அது, வளரும் நாடுகளுக்கு பெரிய சுமையாக மாறிவிடுகிறது என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மற்ற நாடுகளிடம் இருந்து அன்னிய முதலீட்டைப் பெறும் நாடுகள், அந்த முதலீட்டை, பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காணும் திட்டங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
ஆனால், அதுவே, கட்டுப்பாடாக மாறிவிடக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

