வாங்க தங்கங்களா..! 29 பதக்கங்களை வென்ற இந்திய பாராலிம்பிக் வீரர்களுக்கு டில்லியில் உற்சாக வரவேற்பு
வாங்க தங்கங்களா..! 29 பதக்கங்களை வென்ற இந்திய பாராலிம்பிக் வீரர்களுக்கு டில்லியில் உற்சாக வரவேற்பு
ADDED : செப் 10, 2024 10:48 AM

புதுடில்லி: பாரிசில் இருந்து திரும்பிய இந்திய பாராலிம்பிக் வீரர்களுக்கு டில்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பாராலிம்பிக் போட்டி கடந்த ஆக. 28ல் துவங்கியது. நேற்று நிறைவு பெற்றது. இதில் 168 நாடுகளை சேர்ந்த 4,400 மாற்றுத்திறனாளி நட்சத்திரங்கள் மனஉறுதியுடன் சாதித்தனர். இந்தியா சார்பில் 84 பேர், 12 வகையான போட்டிகளில் பங்கேற்றனர். தடகளம், பாட்மின்டன், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, ஜூடோ என 5 போட்டிகளில் அசத்திய நமது நட்சத்திரங்கள் மொத்தம் 29 பதக்கங்கள் பெற்று தந்தனர்.
29 பதக்கம், 18வது இடம்!
பாரிஸ் பாராலிம்பிக்கில் 7 தங்கம் உட்பட 29 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 18வது இடம் பிடித்தது. முதலிடத்தை சீனா தட்டிச் சென்றது. இந்நிலையில், இன்று (செப்.,10) பாரிசில் இருந்து திரும்பிய இந்திய பாராலிம்பிக் வீரர்களுக்கு டில்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மேள தாளத்துடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பாராலிம்பிக் வீரர்களுடன் மகிழ்ச்சியாக மொபைல் போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் (2021) இந்தியாவுக்கு 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கம் கிடைத்திருந்தது. பாராலிம்பிக்கில் 1968 முதல் 2021 வரை இந்தியா (9 தங்கம், 12 வெள்ளி, 10 வெண்கலம்) மொத்தம் 31 பதக்கம் வென்றது. இம்முறை பாரிசில் மட்டும் 29 பதக்கங்கள் கிடைத்தன.

