சொந்த நாட்டு பிரச்னையை கவனியுங்கள்: வங்கதேசத்துக்கு இந்தியா பதிலடி
சொந்த நாட்டு பிரச்னையை கவனியுங்கள்: வங்கதேசத்துக்கு இந்தியா பதிலடி
ADDED : ஏப் 19, 2025 12:14 AM

புதுடில்லி: மேற்கு வங்க கலவரம் குறித்து கருத்து தெரிவித்த வங்கதேசத்துக்கு, 'முதலில் சொந்த நாட்டில் உள்ள ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள்' என, மத்திய அரசு பதிலடி தந்துள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தில், வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 8ம் தேதி நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
கலவரம்
முர்ஷிதாபாத் மட்டுமின்றி மால்டா, தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி ஆகிய பகுதிகளிலும் கலவரம் ஏற்பட்டது.
கல் வீச்சு, கடைகள் சூறை, வாகனங்களுக்கு தீ வைப்பு ஆகிய சம்பவங்கள் நடந்தன. நுாற்றுக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துஉள்ளனர்.
இந்த கலவரத்தில் தந்தை மகனான ஹரகோபிந்த் தாஸ், சந்தன் தாஸ் உட்பட மூவர் கொல்லப்பட்டனர். இந்த கொலையில் தொடர்புடைய இன்சமாம் உல் ஹக்கை போலீசார் கைது செய்துள்ளனர். இவரை தவிர கலவரத்தில் ஈடுபட்ட 270க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறையில் வங்கதேச ஊடுருவல்காரர்களின் பங்கு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் சந்தேகம் எழுப்பியிருந்தது.
இந்நிலையில், மேற்கு வங்க கலவரம் குறித்து வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனிசின் செய்தித் தொடர்பாளர் ஷபிகுல் ஆலம், அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், 'முர்ஷிதாபாத் வன்முறையில் வங்கதேசத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. இந்த வன்முறையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கவை.
'இந்திய அரசும், மேற்கு வங்க அரசும் முஸ்லிம் சிறுபான்மையினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு இந்தியா தரப்பில் காட்டமான பதிலடி தரப்பட்டுள்ளது.
கவலை
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:
மேற்கு வங்கத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து வங்கதேசம் தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தொடர்ச்சியான தாக்குதல் குறித்து இந்தியா உண்மையாக கவலை தெரிவித்திருந்தது.
ஆனால், வங்கதேசம் நேர்மையற்ற முயற்சியில் இறங்கியுள்ளது.
அவர்கள் தேவையற்ற கருத்துகளைத் தெரிவிப்பதற்குப் பதில், தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.