இருந்தது காங்கிரஸ்; சேர்ந்தது பா.ஜ.,; இப்போ சுயேச்சை; தேர்தல் களத்தில் பணக்காரப் பெண்மணி!
இருந்தது காங்கிரஸ்; சேர்ந்தது பா.ஜ.,; இப்போ சுயேச்சை; தேர்தல் களத்தில் பணக்காரப் பெண்மணி!
UPDATED : செப் 13, 2024 09:09 AM
ADDED : செப் 13, 2024 09:05 AM

சண்டிகர்: ஹரியானா தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக இந்தியாவின் பணக்கார பெண் சாவித்ரி ஜிண்டால் போட்டியிடுகிறார்.
ஹரியானா மாநில சட்டசபைக்கு வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 8ம் தேதி அறிவிக்கப்படும். இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நேற்று (செப்டம்பர் 12) முடிவடைந்தது. இந்த தேர்தலில், பா.ஜ., காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜே.ஜே.பி., ஐ.என்.எல்.டி., என பல முனைப்போட்டி நிலவுகிறது.
கட்சிகள் மட்டுமின்றி, செல்வாக்கு மிகுந்த தனி நபர்களும் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவர் தான் சாவித்ரி ஜிண்டால். பிரபல தொழிலதிபரான இவர் தான் நாட்டிலேயே மிகவும் பணக்காரப் பெண்மணி என்ற பெருமைக்குரியவர். இவரது வயது 74.
வேட்பு மனு
கடைசிநேரத்தில் நேற்று, தேர்தலில் களம் இறங்க முடிவு செய்து, வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் இரண்டு முறை ஹிசார் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார். 2013ல் சிங் ஹூடா அரசாங்கத்தில் அமைச்சரானார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் காங்கிரஸிலிருந்து விலகி, அவரது மகன் நவீன் ஜிண்டாலுடன் பா.ஜ.,வில் சேர்ந்தார். தற்போது, சாவித்ரி ஜிண்டால் ஹரியானா அமைச்சரும் ஹிசார் சிட்டிங் எம்.எல்.ஏவுமான கமல் குப்தாவுக்கு எதிராக களத்தில் இறங்கி உள்ளார்.
சாவித்ரி சொல்வது என்ன?
வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு, சாவித்ரி ஜிண்டால் கூறியதாவது: ஹிசார் தொகுதி வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்காக நான் சேவை செய்வேன். ஹிசார் தொகுதி மக்கள் எனது குடும்பம். ஜிண்டால் குடும்பம் எப்போதும் ஹிசார் தொகுதி மக்களுக்கு சேவை செய்து வருகிறது.
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வதற்கும், அவர்களின் நம்பிக்கையைப் பேணுவதற்கும் நான் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். நான் எனது மகனுக்காக லோக்சபா தேர்தலில் மட்டுமே பிரசாரம் செய்தேன். நான் பா.ஜ.,வில் உறுப்பினராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சொத்து மதிப்பு!
மொத்தம் 29.1 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு கொண்ட சாவித்ரி ஜிண்டால் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெறுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.