ரூ.1,500 கோடி நிதி வழங்கியும் முட்டை வழங்குவதில் அலட்சியம்
ரூ.1,500 கோடி நிதி வழங்கியும் முட்டை வழங்குவதில் அலட்சியம்
ADDED : நவ 09, 2024 11:11 PM

பெங்களூரு: தொழிலதிபர் அஜிம் பிரேம்ஜி அறக்கட்டளை, 1,500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியும், அரசு பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கும் திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, 98 அதிகாரிகளுக்கு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடகாவின், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு, முட்டை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தியது. மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம், கடலை மிட்டாய் வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் வாரம் மூன்று நாட்களுக்கு மட்டும் முட்டை வழங்கப்பட்டது.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, வாரத்தில் ஆறு நாட்களும் முட்டை வழங்கும்படி, தொழிலதிபர் அஜிம் பிரேம்ஜி ஆலோசனை கூறினார்.
இதற்காக 1,500 கோடி ரூபாய் நிதியுதவியும் வழங்கினார். வாரம் ஆறு நாட்களும் முட்டை வழங்கும் திட்டம், ஒரு மாதத்துக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது.
ஆனால் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால், திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள, அஜிம் பிரேம்ஜி அறக்கட்டளை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.
கல்வித்துறையின் அனுமதியுடன், அறக்கட்டளையின் நான்கு குழுவினர், 357 பள்ளிகளில் ஆய்வு நடத்தினர். 66 பள்ளிகளில், முட்டையே வழங்காதது தெரிந்தது.
பள்ளிகளின் 30 சதவீதம் மாணவர்கள், தங்களுக்கு முட்டை வேண்டும் என, கேட்டும் முட்டைக்கு பதிலாக வாழைப்பழம் அல்லது கடலை மிட்டாய் வழங்கப்பட்டுள்ளது. முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம் கொடுப்பது கட்டாயம்.
ஆனால் வெறும் கடலை மிட்டாய் மட்டும் வழங்குவது, ஆய்வில் தெரிய வந்தது. இதையும் கூட நிர்ணயித்த எடையை விட, சிறிதான கடலை மிட்டாய் வழங்குகின்றனர்.
இதுதொடர்பாக, அஜிம் பிரேம்ஜி அறக்கட்டளை குழுவினர், கல்வித்துறை அறிக்கை அளித்துள்ளனர். இதைத் தீவிரமாக கருதிய கல்வித்துறை, மாணவர்களுக்கு முட்டை வழங்கும் பொறுப்பில் அலட்சியம் காட்டிய 50 ஊழியர்கள் உட்பட, 98 அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்டுள்ளது.