காலிஸ்தான் விவகாரத்தில் பிரிட்டன் அலட்சியம்: வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து
காலிஸ்தான் விவகாரத்தில் பிரிட்டன் அலட்சியம்: வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து
UPDATED : மார் 07, 2025 09:16 PM
ADDED : மார் 07, 2025 09:07 PM

புதுடில்லி: '' லண்டனில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்க முயன்றது, பிரட்டனின் அலட்சியத்தை காட்டுகிறது'', என மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
பிரிட்டனின் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திரும்பிய போது, அங்கு கூடியிருந்த காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் ஒருவர், அமைச்சரின் காரை நோக்கி பாய்ந்து அவரை தாக்க முயன்றார். மேலும் மூவர்ணக் கொடியை கிழித்து அவமதித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்து இருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக டில்லியில் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: லண்டனில் நடந்த சம்பவம், அந்நாட்டின் அலட்சியத்தை காட்டுகிறது. பிரிட்டனில் செயல்படும் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறியது தொடர்பாக இந்தியா தனது கவலையை பிரிட்டனிடம் தெரிவித்து உள்ளது.
இச்சம்பவத்தில் பெரியளவில் உள்ள சூழலை புரிந்து கொள்வது அவசியம். அத்தகைய சக்திகளுக்கு உள்ள சுதந்திரம் மற்றும் பிரிட்டனின் அலட்சியத்தையும் காட்டுகிறது. பிரிட்டனில் நமது ராஜ தந்திர நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில் அவர்களது மிரட்டல்கள் மற்றும் நடவடிக்கைகள் உள்ளன.
இந்த விவகாரத்தில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையை நாங்கள் பார்த்து உள்ளோம். இச்சம்பவம் மற்றும் இதற்கு முன்பு நடந்த சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகள் மீது அந்நாடு எடுக்கும் நடவடிக்கையை வைத்து மட்டுமே அந்நாட்டின் நேர்மையை கணிக்க முடியும் என்பது எங்களின் எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.