உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் எம்கே1ஏ போர் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் எம்கே1ஏ போர் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி
ADDED : அக் 17, 2025 01:39 PM

நாசிக்: முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் எம்கே1ஏ ரக போர் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்திய விமானப்படையில் இலகுரக போர் விமானமான தேஜஸ் ரக போர் விமானங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த சூழலில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய ரக தயாரிப்பான தேஜஸ் எம்கே1ஏ-ன் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இந்த சோதனை ஓட்டம் நடந்தது. முன்னதாக, பயிற்சி விமானமான ஹெச்டிடி-40 மற்றும் எஸ்யு-30 எம்கேஐ விமானங்களின் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த மூன்று விமானங்களும் ஒன்றாக வானில் பறந்தன. இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
ஆயுதம் மற்றும் ரேடார் ஒருங்கிணைப்பு சோதனைகள் வெற்றிகரமாக முடிவடையும் பட்சத்தில், தேஜஸ் எம்கே1ஏ போர் விமானம், இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் எப்404 ரக இன்ஜின்கள் வாங்க ரூ.5,375 கோடியில் ஆர்டர் செய்யப்பட்டது. ஆனால், இன்ஜின்கள் விநியோகிப்பதில் நிலவும் தாமதத்தால், தற்போது வரை 4 இன்ஜின்கள் மட்டும் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் மேலும் 8 இன்ஜின்கள் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஆண்டுக்கு 20 இன்ஜின்களை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில், கிடைக்கும் இன்ஜின்களை வைத்து சோதனை முயற்சிகளை எச்ஏஎல் நிறுவனம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.