டில்லி புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
டில்லி புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : செப் 30, 2025 01:11 PM

புதுடில்லி: மும்பையில் இருந்து டில்லிக்கு 200 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் நடத்திய சோதனையில் புரளி என்பது தெரியவந்தது.
மும்பையில் இருந்து டில்லிக்கு 200 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்ட தயாரானது. அப்போது விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் வாயிலாக வந்தது. பின்னர் விமானத்தில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் புரளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து விமானம் டில்லி புறப்பட்டு சென்றது. இது குறித்து இண்டிகோ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: வெடிகுண்டு மிரட்டல் வந்த உடன் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம். பின்னர் அவர்கள் சோதனை செய்வதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினோம்.
சோதனைக்கு பிறகு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபர் யார் என்று விசாரணை நடந்து வருகிறது. விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவு உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
தூதரகங்களில் பரபரப்பு
அதேபோல், சென்னையில் உள்ள 9 வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையில் புரளி என்பது தெரியவந்தது.