ADDED : மே 10, 2025 03:37 AM

இந்துார்: நம் நாட்டில் பிச்சைக்காரர்கள் இல்லாத முதல் நகரமாக, மத்திய பிரதேசத்தின் இந்துார் தேர்வாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரமான இந்துார், நாட்டின் துாய்மையான நகரம் என்ற பெருமையை, கடந்த ஏழு ஆண்டுகளாக தக்க வைத்துள்ளது. இந்நிலையில், இந்த நகரத்துக்கு மேலும் ஒரு பெருமை கிடைத்துள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சிங், நிருபர்களிடம் கூறியதாவது:
இந்துார் நகரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கான பிரசாரம், கடந்த ஆண்டு பிப்ரவரியில் துவங்கியது. இந்துாருடன் சேர்த்து, நாட்டின் 10 நகரங்களில் பிச்சைக்காரர்களை இல்லாமல் ஆக்குவதற்கான பிரசாரம் துவங்கியது.
அப்போது, இந்துாரில் 500 குழந்தைகள் உள்ளிட்ட, 5,000 பிச்சைக்காரர்கள் இருந்தனர். அவர்களிடம் முதலில் பேசினோம். அதன் பின், அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தினோம். பின், வேலைவாய்ப்பை வழங்கி, அவர்களை பிச்சை எடுக்கும் தொழிலில் இருந்து மாற்றினோம்.
இப்போது இந்த நகரம் பிச்சைக்காரர்களே இல்லாத நகரமாக தேர்வாகியுள்ளது. இதை, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறையும், உலக வங்கியும் அங்கீகரித்துள்ளன.
பிச்சை எடுத்த குழந்தைகள் இப்போது பள்ளிக்கு செல்கின்றனர். அண்டை மாநிலமான ராஜஸ்தானில் இருந்து இங்கு வந்து பிச்சை எடுத்தவர்கள் கண்டறியப்பட்டனர். பிச்சை எடுப்பதும், பிச்சை கொடுப்பதும் சட்ட விரோதம் என சட்டம் கொண்டு வந்தோம். சட்டத்தை மீறியதாக இதுவரை மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிச்சைக்காரர்கள் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு 1,000 ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்தோம். இப்போது, படிப்படியாக பிச்சைக்காரர்களே இல்லாத நகரமாக மாறி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.