சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிப்பு; பாகிஸ்தானுக்கு வலிக்கும் இடத்தில் அடிக்கிறது இந்தியா!
சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிப்பு; பாகிஸ்தானுக்கு வலிக்கும் இடத்தில் அடிக்கிறது இந்தியா!
UPDATED : ஏப் 24, 2025 11:03 AM
ADDED : ஏப் 24, 2025 08:36 AM

புதுடில்லி: இந்தியாவில் இடைவிடாமல் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா முறித்துக் கொண்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, சட்லெஜ், பியாஸ், ரவி ஆகிய மூன்று நதிகளும் முற்றிலும் இந்தியாவுக்கு சொந்தமானவை. அவற்றில் வரும் நீரை இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம். சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்று நதிகளும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த நதிகளில் வரும் தண்ணீரை இந்தியா முற்றிலும் பயன்படுத்த முடியாது.
குடிநீர் வினியோகம், பாசனம், நீர் மின்சார உற்பத்தி ஆகியவற்றுக்கு இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம். பெரிய அளவில் அணைகள் எதுவும் கட்டி இந்த மூன்று நதிகளின் நீரை சேகரிக்கக்கூடாது. இந்த நதிகளில் எந்த அளவு இந்தியா தண்ணீர் பயன்படுத்தலாம் என்பதற்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீப காலம் வரை, இந்த நதிகளில் இந்தியாவுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவாகவே இந்தியா பயன்படுத்தி வருகிறது.
உலக வங்கி மத்தியஸ்தம் செய்து ஏற்படுத்திய இந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம், இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த 1965, 1971 போர்கள், கார்கில் போர் ஆகியவற்றை கடந்தும் செயல்பாட்டில் இருந்தது. மும்பையில் 26/ 11 தாக்குதல் நடந்த நிலையிலும் இந்த ஒப்பந்தத்தை இந்தியா தொடவில்லை. இதற்கு பாகிஸ்தானிய விவசாயிகள் பாதிக்கப்படுவர், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்ற மனிதாபிமான அடிப்படையே காரணம்.
ஆனால் அமைதிக்கு திரும்பி கொண்டிருக்கும் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை சுட்டுக்கொன்ற சம்பவத்தை தொடர்ந்து, முதல்முறையாக இந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளதன் மூலம், மேற்கு நோக்கி பாயும் மூன்று நதிகளிலும் தண்ணீரை தடுத்து நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க உள்ளது.
மூன்று நதிகளிலும் எங்கெல்லாம் வாய்ப்புள்ளதோ அந்த இடங்களில் எல்லாம் தண்ணீர் திருப்பி விடப்படும். இந்தியாவின் இந்த நடவடிக்கை, பாகிஸ்தானில் குறைந்தது இரண்டு மாநிலங்களில் குடிநீர் மற்றும் வேளாண்மைக்கு தண்ணீர் கிடைக்காத நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.
1960ம் ஆண்டு கராச்சியில் கையெழுத்திடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம், 65 ஆண்டு காலம் செயல்பாட்டில் இருந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, அப்போதைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் செயல்படுத்த, நிரந்தர சிந்து நதி நீர் ஆணையம் செயல்பாட்டில் உள்ளது.
ஒப்பந்தம் அமல் செய்வதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், இரு தரப்பினரும் உலக வங்கி மேற்பார்வையிலான சர்வதேச நடுவர் மன்றத்தை அணுக முடியும். அதன்படி பாகிஸ்தான் ஏற்கனவே இந்தியா மீது சில முறை புகார் அளித்துள்ளது.