முதல் டெஸ்டில் இந்தியா அபார பந்துவீச்சு: 246 ரன்களுக்கு இங்கிலாந்து 'ஆல்அவுட்'
முதல் டெஸ்டில் இந்தியா அபார பந்துவீச்சு: 246 ரன்களுக்கு இங்கிலாந்து 'ஆல்அவுட்'
UPDATED : ஜன 25, 2024 05:01 PM
ADDED : ஜன 25, 2024 03:59 PM

ஐதராபாத்: முதல் டெஸ்டில் இந்திய பவுலர்கள் அசத்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இங்கிலாந்து அணிக்கு இந்திய பவுலர்கள் தொல்லை தந்தனர். அஷ்வின் 'சுழலில்' டக்கெட் (35), கிராலே (20) சிக்கினர். ரவிந்திர ஜடேஜா பந்தில் போப் (1), ஜோ ரூட் (29) அவுட்டாகினர்.
அக்சர் படேல் பந்தில் ஜானி பேர்ஸ்டோவ் (37), பென் போக்ஸ் (4) சரணடைந்தனர். பும்ரா 'வேகத்தில்' ரேஹன் அகமது (13) வெளியேறினார். பொறுப்பாக ஆடிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (70) அரைசதம் கடந்தார். ஹார்ட்லி (23), மார்க் உட் (11) போல்டாகினர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் அஷ்வின், ஜடேஜா தலா 3, அக்சர், பும்ரா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
ஜெய்ஸ்வால் அரைசதம்
பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்து அசத்தினார். ரோகித் 24 ரன்னில் கேட்சானார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் (76), சுப்மன் கில் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.