ADDED : மார் 01, 2024 06:22 AM
தார்வாட்: ஒரு வயது குழந்தையை சுவரில் அடித்துக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.
தார்வாடின் யாதவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷம்பய்யா, 30. இவருக்கு திருமணமாகி, 1 வயதில் ஸ்ரேயா என்ற பெண் குழந்தை உள்ளது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர், தினமும் குடித்து வந்து, மனைவியிடம் தகராறு செய்வார்; அடித்து துன்புறுத்துவார்.
வழக்கம் போன்று, நேற்று முன் தினம் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஷம்பய்யா, மனைவியுடன் வாக்குவாதம் செய்தார். உணவு சாப்பிட்டுவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்தார். நள்ளிரவு 1:00 மணியளவில் குழந்தை ஷ்ரேயா அடம் பிடித்து அழுதது. தாய் சமாதானம் செய்தும் முடியவில்லை.
கோபமடைந்த ஷம்பய்யா, “தினமும் என்னை துாங்கவிடாமல் தொல்லை கொடுக்கிறாய்,” என கூறி குழந்தையின் இரண்டு கால்களையும் பிடித்து, சுவரில் ஓங்கி அடித்தார். பலத்த காயமடைந்த குழந்தையை, ஹூப்பள்ளியின் கிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி, நேற்று காலை குழந்தை இறந்தது.
கரகா போலீசார், ஷம்பய்யாவை கைது செய்தனர்.

