போலி செய்திகளை தடுக்க தகவல் சீர்குலைவுகளை தடுக்கும் பிரிவு
போலி செய்திகளை தடுக்க தகவல் சீர்குலைவுகளை தடுக்கும் பிரிவு
ADDED : பிப் 17, 2024 04:59 AM
பெங்களூரு, : 'சமூக வலைதளங்களில் போலி செய்திகளை தடுக்க, தகவல் சீர்குலைவுகளை சமாளிக்கும் பிரிவு அமைக்கப்படும்' என பட்ஜெட்டில் முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
சமூகத்தில் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட சமூக வலைதளம், தற்போது தீய எண்ணம், பொய் தகவல்களை பரப்பும் விஷயமாக மாறி வருகிறது.
கடந்தாண்டு டிசம்பரில், பெங்களூரு நகரில் துணை முதல்வர் சிவகுமாரின் பள்ளி உட்பட 48 பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது.
அதுபோன்று, இரு சமூகங்களுக்கு இடையே பொய்யான தகவல்கள் பரப்பி, பதற்றத்தை ஏற்படுத்துவது உட்பட பல தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகின்றன.
இத்தகைய செய்திகளை தடுக்க, தனிப்பிரிவு அமைக்கப்படும் என முதல்வர் சித்தராமையா ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட்டில் குறிப்பிட்டு உள்ளதாவது:
சமூக வலைதளங்களில் சமூகத்துக்கு அச்சுறுத்தல், பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்திகள் பரப்புகின்றனர். இத்தகையோரை கண்டுபிடிக்க தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்ப துறையுடன் இணைந்து, 'ஐ.டி.பி.டி., என்ற தகவல் சீர்குலைவுகளை சமாளிக்கும் பிரிவு அமைக்கப்படும். இதற்காக உள்துறை அமைச்சகத்தில் சிறப்பு பிரிவு துவங்கி, தவறான செய்திகள் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
* பொய் செய்தி, குற்றங்களை தடுக்க, சைபர் குற்றப்பிரிவுவை பலப்படுத்த, 43 போலீஸ் நிலையங்களில் உள்ள சி.இ.என்., என்ற சைபர், பொருளாதாரம், போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேம்படுத்தப்படும்
* 'போலீஸ் கிரஹா - 2025' திட்டத்தின் கீழ், இதுவரை 1,128 போலீஸ் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. 800 கோடி ரூபாய் செலவில் 2,956 போலீஸ் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. 2024 - 25ல் இதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
* சொந்த கட்டடம் இல்லாத போலீஸ் நிலையங்களுக்காக புதிதாக கட்டடம் கட்ட 30 கோடி ரூபாய்; தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் நடமாடும் தடயவியல் மற்றும் ஒளி - ஒலி பிரிவை பலப்படுத்த 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு; கர்நாடக மாநில சிறைச்சாலைகள் மற்றும் நிர்வாகத்தில் சீரான பணிகள் நடக்க செயற்கை நுண்ணறிவு மென்பொருள், உடமைகள் ஸ்கேன்னர்கள் அமைக்க, 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* ஷிவமொகா மாவட்டத்தில் அதிக பாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலை கட்ட, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு; பெங்களூரு போலீஸ் சுலிவன் விளையாட்டு மைதானத்தில் 'ஆஸ்ட்ரோ டர்ப் ஹாக்கி மைதானம்' கட்ட, 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.