ரேடியோ அலைவரிசை வாயிலாக தகவல் பரிமாற்றம்! இந்திய - வங்கதேச எல்லையில் பதற்றம்
ரேடியோ அலைவரிசை வாயிலாக தகவல் பரிமாற்றம்! இந்திய - வங்கதேச எல்லையில் பதற்றம்
ADDED : பிப் 10, 2025 06:16 AM

கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலத்தில், இந்தியா - வங்கதேசம் எல்லையில், ரேடியோ அலைவரிசையை பயன்படுத்தி சங்கேத குறியீடுகளுடன், பெங்காலி, உருது, அராபிக் மொழிகளில் தகவல்கள் பரிமாறப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது, பயங்கரவாதிகளின் முயற்சியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டங்கள் வன்முறையாக மாறின. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.
வன்முறை
இதைத் தொடர்ந்து, பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அங்கு அமைந்துள்ளது. ஆனாலும், தொடர்ந்து போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன. இவற்றைத் தவிர, ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இதனால், இரு தரப்பு உறவு பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வங்கதேசத்தில் இருந்து பலர் நம் நாட்டுக்குள் தஞ்சமடைந்து வருகின்றனர்; பயங்கரவாதிகளும் ஊடுருவி வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், 'ஹாம் ரேடியோ' எனப்படும் அமெச்சூர் ரேடியோ என்ற தொலை தொடர்பு வசதி பயன்படுத்துவோர், இந்தியா - வங்கதேசம் எல்லையில், மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில், சந்தேகப்படும்படி சங்கேத குறியீடுகளுடன், பெங்காலி, உருது, அராபிக் மொழிகளில் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுவதை கண்டுபிடித்தனர்.
ஹாம் ரேடியோ என்பது ஒரு பொழுதுபோக்குடன் கூடிய தகவல் பரிமாற்ற முறை. வழக்கமான தொலைபேசி, மொபைல் போன் வசதி இல்லாத இடங்களில் ஹாம் ரேடியோ பயன்படுத்துவோர், ரேடியோ அலைவரிசை வாயிலாக தகவல்களை பரிமாறிக் கொள்வர். இதை பயன்படுத்த லைசென்ஸ் பெற வேண்டும். பேரிடர் காலங்களில் இந்த வசதி பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
சந்தேகம்
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் உள்ள ஹாம் ரேடியோ பயன்படுத்துவோர், கடந்த டிசம்பரில் முதல் முறையாக இது போன்ற சந்தேகப்படும்படியான தகவல் பரிமாற்றம் செய்யப்படு வதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக, மத்திய அரசுக்கு உரிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பாசிர்ஹட், பான்கோன் உட்பட சில இடங்களில் இந்த ரேடியோ அலைவரிசை வாயிலாக தகவல் பரிமாறப்பட்டது தெரிய வந்துள்ளது. ''வழக்கமாக, ரேடியோ அலைவரிசையை பயன்படுத்தும்போது, மற்றொருவர் இணைந்தால், தன்னை அறிமுகம் செய்ய வேண்டும்.
''ஆனால், இந்த விவகாரத்தில் அவர்களை அறிமுகம் செய்யாமல், இணைப்பை துண்டித்து விட்டனர். இதுவே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது,'' என, மேற்கு வங்க ரேடியோ கிளப் செயலர் அம்பரிஷ் நாக் பிஸ்வாஸ் கூறினார்.
இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது பயங்கரவாதிகளின் சதியாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர்.