ஸ்காலர்ஷிப் விண்ணப்பங்கள் பரிசீலனை மாநில சமூக நலத்துறை அமைச்சர் தகவல்
ஸ்காலர்ஷிப் விண்ணப்பங்கள் பரிசீலனை மாநில சமூக நலத்துறை அமைச்சர் தகவல்
ADDED : ஜூன் 20, 2025 08:37 PM
புதுடில்லி:''எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., பிரிவினரின், 52 சதவீத ஸ்காலர்ஷிப் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன,'' என, டில்லி மாநில சமூக நலத்துறை அமைச்சர் ரவீந்தர் இந்ராஜ் கூறினார்.
டில்லியில் நேற்று, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளை, சமூக நலத்துறை அமைச்சர் ரவீந்தர் இந்ராஜ் சந்தித்தார். அவர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின், நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
கல்லுாரிகளின் மாணவர்கள் செலுத்திய டியூஷன் கட்டணத்தை திரும்ப அளித்தல், முதல்வர் வித்யார்த்தி பிரதிபா யோஜனா, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மாநில முதல் மாணவர் விருது, மெட்ரிக் வகுப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் வகுப்புக்கு பிந்தைய ஸ்காலர்ஷிப் திட்டங்கள், கல்லுாரி மற்றும் பல்கலை மாணவர்களின் மெரிட் ஸ்காலர்ஷிப் மற்றும் எஸ்.சி., மாணவர்களுக்கு வெளிநாடுகளில் உயர் கல்வி கற்கும் திட்டத்திற்கான உதவித்தொகை போன்றவை தொடர்பாக, கடந்த சில மாதங்களாக முடங்கியிருந்த விண்ணப்பங்களில், 52 சதவீதம் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய விண்ணப்பங்களை ஆய்வு செய்ய, ஒரு விசேஷ இணையதளம் உருவாக்கப்படும். முந்தைய காலத்தில் பல எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களின் ஹாஸ்டல்கள் மூடப்பட்டுள்ளன. எங்களின் அரசு, ஒரு மாவட்டத்தில் ஒரு ஹாஸ்டலாவது செயல்பட வேண்டும் என விரும்புகிறது.
வரும் 26ம் தேதி, யமுனா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் சர்வதேச போதை ஒழிப்பு நாள் மற்றும் சட்ட விரோதமாக ஆட்களை கடத்துவோர் தடுப்பு நாள் குறித்த நிகழ்ச்சி நடக்கிறது.
நேற்றைய கூட்டத்தில், பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அவற்றை விரைவில் செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.