ADDED : செப் 06, 2024 04:03 PM

புதுடில்லி: பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ள செபி தலைவர் மாதவி புரி புச்-ற்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‛செபி' எனப்படும் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவராக இருப்பவர் மாதவி புரி புச். இவரும், கணவர் தவல் புச் ஆகியோர் அதானி குழுமத்தின் சட்டவிரோத முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் குற்றம்சாட்டியது.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், செபி தலைவராக இருந்து கொண்டு ஐ.சி.ஐ.சி.ஐ., தனியார் வங்கி நிறுவனத்திடம் இருந்து அவர் ரூ.17 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதனையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால், மாதவி புரி புச் தனது மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். இவருக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.
இந்நிலையில் மாதவிக்கு எதிரான புகாரை விசாரிக்க பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக, அக்குழுவின் தலைவராக இருக்கும் கே.சி.வேணுகோபால், அவருக்கு சம்மன் அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்குழுவின் கூட்டம் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது.