பத்திரிகையாளர் மீது தாக்குதல்: ஐ.என்.எஸ்., தலைவர் கண்டனம்
பத்திரிகையாளர் மீது தாக்குதல்: ஐ.என்.எஸ்., தலைவர் கண்டனம்
ADDED : பிப் 23, 2024 12:59 AM

புதுடில்லி: 'பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்துவதையோ, வன்முறையை துாண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவதையோ அரசியல் கட்சிகள் செய்ய வேண்டாம்' என, ஐ.என்.எஸ்., எனப்படும், இந்திய செய்தித்தாள் சொசைட்டி கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து ஐ.என்.எஸ்., தலைவர் ராகேஷ் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கை:
ஊடகவியலாளர் அல்லது செய்தி சேகரிக்கும் நிருபர்கள் மீது அரசியல் கட்சியினர் தாக்குதல் நடத்துவதை ஐ.என்.எஸ்., கண்டிக்கிறது.
சமீபத்தில், உத்தர பிரதேசம் ரே பரேலியில் நடந்த பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின் போது, நிருபர் தாக்கப்பட்டது மிகுந்த கவலை அளிக்கிறது.
செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளருக்கு எதிராக வன்முறையைத் துாண்டும் வகையில் தரக்குறைவான கருத்துக்களை வெளியிடுவதை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தவிர்க்க வேண்டியது அவசியம்.
பத்திரிகை சுதந்திரம் என்பது இந்த ஜனநாயக தேசத்தின் ஒரு அடிப்படை அங்கமாகும். நம் தேசத்தின் ஜனநாயக நலனுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் அதைப் பாதுகாப்பது கட்டாயமாகும்.
ஊடகவியலாளர்கள் அல்லது பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக ஐ.என்.எஸ்., எப்போதும் இருக்கும். அவர்களின் உரிமையைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.