ADDED : பிப் 08, 2024 01:00 AM

பசுக்களை கொல்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக இயற்ற வேண்டும்' என, பசுக்கள் பாதுகாப்பு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
துறவிகள் பங்கேற்பு
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், பசுக்கள் பாதுகாப்பு கூட்டம் நடந்தது.
துவாரகா பீடத்தின் ஜெகத்குரு சங்கராச்சாரியா சுவாமி ஸ்ரீ சதானந்த் சரஸ்வதி, ஜோதிஷ் பீடத்தின் ஜெகத்குரு சங்கராச்சாரியா சுவாமி ஸ்ரீ அவிமுக்தேஷ்வரானந்தா சரஸ்வதி, சிருங்கேரி மடத்தின் பிரதிநிதி சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நாடு முழுதும் இருந்து ஏராளமான பீடாதிபதிகள், துறவிகள் பங்கேற்றனர்.
தேசத்தின் தாய்
பசுக்கள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதன் விபரம்:
பசுக்களுக்கு தேசத்தின் தாய் என்ற அந்தஸ்து வழங்க எம்.பி.,க்கள் உறுதி ஏற்க வேண்டும்.
நம் நாட்டை சேர்ந்த நாட்டு பசுக்கள் இன்று முதல் ராமா பசு என்று அழைக்கப்பட வேண்டும்.
பசு இறைச்சியை உண்பவர்கள், பசுக்களை கொல்பவர்கள், இறைச்சி விற்பனை செய்பவர்கள், அதன் தோலை விற்பனை செய்பவர்கள், பசுக்களை கடத்துபவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும்.
பசு வதையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்.
தற்போதுள்ள கால்நடை அமைச்சகத்தின் கீழ் இருந்து பசுக்களை நீக்கிவிட்டு, பசுக்களுக்கு என்றே தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் உள்ள பசுக்களுக்கான இல்லங்கள் கோசாலை என்று அழைக்கப்படுவதற்கு பதில் கோ மடம் என்றே அழைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-

