வனப்பகுதியில் நாளை ஆய்வு; 'மாஜி' சபாநாயகருக்கு சிக்கல்
வனப்பகுதியில் நாளை ஆய்வு; 'மாஜி' சபாநாயகருக்கு சிக்கல்
ADDED : டிச 18, 2024 10:41 PM

கோலார்; முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படும் நிலத்தை ஆய்வு செய்ய, கோலார் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோலார் வன மண்டலத்தின், ஜினகுலகுன்டி வனப்பகுதியின் 61.39 ஏக்கர் நிலத்தை, காங்கிரசின் முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷாவுக்கு புகார் அளித்தனர். இதை தீவிரமாக கருதிய கோலார் மாவட்ட நிர்வாகம், ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படும் நிலம் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.
வனத்துறை மற்றும் வருவாய்த்துறை ஒருங்கிணைந்து, நாளை ஆய்வை துவக்கவுள்ளன.
தேவையான ஆவணங்களுடன் அந்த இடத்துக்கு ஆஜராகும்படி, ரமேஷ்குமாருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே 61.39 ஏக்கர் நிலத்தை, ரமேஷ்குமார் ஆக்கிரமித்தது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, மாநில வனத்துறைக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும் உத்தரவிட்டுள்ளது.
எனவே ஆய்வை விரைவில் முடிக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

