முதல்வர் விருதுக்கு தேர்வான இன்ஸ்பெக்டர் தலைமறைவு
முதல்வர் விருதுக்கு தேர்வான இன்ஸ்பெக்டர் தலைமறைவு
ADDED : ஏப் 03, 2025 12:36 AM

பெங்களூரு: கர்நாடகாவில், கான்ட்ராக்டரை மிரட்டி வீட்டை அபகரிக்க முயன்ற வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமறைவானார். அவர் முதல்வர் விருதுக்கு தேர்வாகி இருந்தார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு அன்னபூர்ணேஸ்வரி நகரை சேர்ந்தவர் சன்னேகவுடா; கான்ட்ராக்டர். இவர் மீது ஒருவர் மோசடி புகார் அளித்து, வழக்கும் பதிவானது.
மிரட்டல்
சன்னேகவுடாவை மொபைல் போனில் தொடர்பு கொண்ட, அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குமார், 'உங்கள் மீது பதிவான வழக்கு தொடர்பாக, நீங்கள் நிரபராதி என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறேன்.
'ஆனால், உங்கள் வீட்டை என் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும்' என, கேட்டுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சன்னேகவுடா, 'என் வீட்டின் மதிப்பு 4 கோடி ரூபாய். அதை எப்படி எழுதி தருவது?' என்று கேள்வி எழுப்பி உள்ளார். கோபம் அடைந்த இன்ஸ்பெக்டர், 'குறைந்த விலைக்கு அந்த வீட்டை எனக்கு கொடுத்து விடுங்கள். இல்லாவிட்டால் வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளி விடுவேன்' என்று மிரட்டி உள்ளார்.
மேலும், பல வழிகளில் சன்னேகவுடாவுக்கு தொல்லை கொடுத்து, 4 லட்சம் ரூபாய் வரை குமார் வாங்கி உள்ளார். இதையடுத்து, குமார் மீது லோக் ஆயுக்தாவில், சன்னேகவுடா புகார் செய்தார்.
தப்பியோட்டம்
இந்நிலையில், வீட்டை தன் பெயருக்கு மாற்றி தருவது தொடர்பாக பேச வேண்டும் என, சன்னேகவுடாவுக்கு அழைப்பு விடுத்த குமார், நேற்று முன்தினம் மாலை நாகரபாவியில் உள்ள ஹோட்டலில் சக போலீசாருடன் காத்திருந்தார்.
அப்போது, அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார், அன்னபூர்ணேஸ்வரி நகர் நிலைய போலீஸ்காரர்கள் உமேஷ், ஆனந்த் சோமசேகர், ஆராத்யா ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்த குமார், தப்பியோடி விட்டார்.
இதற்கிடையே, போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக, முதல்வர் விருதுக்கு குமார் பெயர் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. நேற்று அவருக்கு விருது வழங்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.