'சார்தாம்' புனித யாத்திரைக்கு முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்
'சார்தாம்' புனித யாத்திரைக்கு முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்
ADDED : ஏப் 16, 2025 04:21 AM

டேராடூன் : உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத்தில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் செல்லும் யாத்திரை 'சார்தாம்' யாத்திரை எனப்படுகிறது.
இந்த கோவில்கள் வெவ்வேறு நாட்களில் திறக்கப்படும், மூடப்படும். அதன்படி, வரும், 30ம் தேதி துவங்கி, நவ., 6ம் தேதி வரை திறந்திருக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புனித யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து மாநில அரசு ஆய்வு நடத்தியது. இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த சில ஆண்டுகளாக புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, சுகமான, வசதியான மற்றும் பாதுகாப்பான யாத்திரைக்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அதன்படி, ஆதார் அடிப்படையில் முன்பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த நாட்களில் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.
யாத்ரீகர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து, ரிஷிகேஷ், ஹரித்வார், விகாஸ்நகர் ஆகிய இடங்களில் நேரடியாக பதிவு செய்யும் வசதியும் வழங்கப்படும். வரும் மே 2 முதல் 31ம் தேதி வரை, முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், நீதித்துறையினர் உள்ளிட்டோர் யாத்திரையை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

