விபத்து இழப்பீடு வழங்காத காப்பீடு நிறுவனங்களுக்கு 'சீல்'
விபத்து இழப்பீடு வழங்காத காப்பீடு நிறுவனங்களுக்கு 'சீல்'
ADDED : மே 23, 2025 12:48 AM

ஷாஜகான்பூர்: உத்தர பிரதேசத்தில், 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்கள் விபத்து இழப்பீடு தொகையை வழங்கவில்லை என, ஷாஜகான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் காப்பீடு செலுத்தியவர்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் 48 லட்சம் ரூபாயும், ஓரியண்டல் இன்சூரன்ஸ நிறுவனம் 1 கோடியே 10 லட்சம் ரூபாயும், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் 74 லட்சம் ரூபாயும் நிலுவை வைத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், குறிப்பிட்ட காலத்திற்குள் இழப்பீட்டு தொகையை வழங்கும்படி உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்நிறுவனங்கள் உத்தரவை பின்பற்றவில்லை.
நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத மூன்று காப்பீட்டு நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க, மாவட்ட நீதிபதி தர்மேந்திர பிரதாப் சிங் உத்தரவிட்டார்.
இதன்படி, ஓரியண்டல் இன்சூரன்ஸ் மற்றும் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவன அலுவலகங்களுக்கு, போலீசார் முன்னிலையில் நேற்று சீல் வைக்கப்பட்டது; யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது.