ADDED : நவ 15, 2024 09:15 PM
புதுடில்லி:குடும்பத் தகராறில் தலையிட்ட பக்கத்து வீட்டுக்காரரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
வடக்கு டில்லியைச் சேர்ந்தவர் தீரஜ். கடந்த 13ம் தேதி இரவு தன் மனைவியுடம் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் மனைவியை கண்மூடித்தனமாக தாக்கினார். இருவரும் சண்டையிடும் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டில் வசித்த ரான்சிங்,42, கடும் எரிச்சல் அடைந்தார்.
தீரஜ் வீட்டுக்கு வந்து இருவரையும் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது அறிவுரையை கேட்க மறுத்த தீரஜ், ரான்சிங் மீது ஆத்திரம் அடைந்தார். மனைவியை விட்டு விட்டு ரான் சிங்குடன் தகராறு செய்யத் துவங்கினார். ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரம் அடைந்து, இரும்புக் கம்பியால் ரான் சிங்கை சரமாரியாகக் தாக்கினார்.
ரத்த வெள்ளத்தில் அலறியபடியே ரான் சிங் மாடிப் படிகளில் சரிந்து உருண்டார். இதையடுத்து, தீரஜ் தப்பி ஓடினார். அலறல் கேட்டு அவரது குடும்பத்தினர் வந்து ரான் சிங்கை மீட்டு, பி.ஜே.ஆர்.எம்., மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், ரான் சிங் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். தகவல் அறிந்து போலீசார் வந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, ரான் சிங் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். மேலும், தலைமறைவாக இருந்த தீரஜை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.