விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்
ADDED : ஜூன் 15, 2025 03:35 AM

ஆமதாபாத்: 'ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உயிர் பிழைத்தவர்களுக்கும் தலா, 25 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும்' என, 'ஏர் இந்தியா' நிறுவனம் அறிவித்துள்ளது.
குஜராத்தின் ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, டாடா குழுமம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், இறந்தவர்களுக்கும், உயிர் பிழைத்தவர்களுக்கும் தலா 25 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியும், மேலாண் இயக்குநருமான கேம்பல் வில்சன் நேற்று கூறியதாவது:
எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடனடி தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இது டாடா நிறுவனம் வழங்குவதாக கூறிய 1 கோடி ரூபாயுடன் சேர்த்து வழங்கப்படும்.
இந்த விபத்தில் சொந்தங்களை இழந்த குடும்பத்தினருக்கு ஏர் இந்தியா நிறுவனம் எப்போதும் உறுதுணையாக நிற்கும். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருக்கிறோம்.
இழப்பீட்டுடன் காயமடைந்த அனைவரின் மருத்துவ செலவுகளையும் ஏர் இந்தியா ஏற்கும். மீட்புப் பணியில் உதவ 100 பராமரிப்பாளர்கள் மற்றும் 40 பொறியாளர்கள் ஆமதாபாத் விரைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.