சர்வதேச பயங்கரவாதி பர்மீந்தர் சிங் அபுதாபியில் இருந்து நாடு கடத்தல்
சர்வதேச பயங்கரவாதி பர்மீந்தர் சிங் அபுதாபியில் இருந்து நாடு கடத்தல்
ADDED : செப் 28, 2025 07:27 AM

அமிர்தசரஸ் : பஞ்சாபில், சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட சர்வதேச பயங்கரவாதி பர்மீந்தர் சிங் என்ற 'பிண்டி'யை, அபுதாபியில் இருந்து நம் போலீசார் நேற்று பஞ்சாப் அழைத்து வந்தனர்.
நம் நாட்டில், 'பாபர் கல்சா இன்டர்நேஷனல்' என்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி பர்மீந்தர் சிங் என்ற பிண்டி, சர்வதேச பயங்கரவாதிகளான ஹர்விந்தர் சிங் ரிண்டா, ஹேப்பி பாசியா ஆகியோரின் துணையுடன் பஞ்சாபில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பட்டாலா- - குர்தாஸ்பூர் பகுதி முழுதும் பெட்ரோல் குண்டுத் தாக்குதல்கள், வன்முறை சம்பவங்கள் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் பர்மீந்தர் சிங் ஈடுபட்டதை அடுத்து, அவரை கைது செய்யும் நடவடிக்கையை பஞ்சாப் போலீசார் மேற்கொண்டனர்.
தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பர்மீந்தர் சிங், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில், இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவரை கைது செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டது.
இதற்காக, பஞ்சாப் போலீஸ் உயரதிகாரி தலைமையிலான நான்கு பேர் அடங்கிய குழு, அபுதாபி சென்றது. அங்குள்ள அரசுடன் தேவையான நடைமுறைகளை பின்பற்றிய பின், பர்மீந்தர் சிங்கை கைது செய்து நம் நாட்டிற்கு போலீசார் நேற்று அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.