ADDED : பிப் 01, 2024 06:45 AM

பெங்களூரு: கே.ஆர்.பி., எனும் கல்யாண கர்நாடக முன்னேற்ற கட்சியை, பா.ஜ.,வில் இணைக்கும்படி கட்சி மேலிடம் ஆலோசனை கூறியுள்ளது. இந்த விஷயத்தில் ஜனார்த்தன ரெட்டி குழப்பத்தில் உள்ளார்.
முன்னாள் அமைச்சரும், கே.ஆர்.பி., தலைவருமான ஜனார்த்தன ரெட்டியை, பா.ஜ.,வுக்கு இழுக்க முயற்சி நடக்கிறது. லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி வைப்பதாக, அவர் ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
கூட்டணி வைப்பதற்கு பதில், கே.ஆர்.பி.,யை பா.ஜ.,வில் இணைக்கும்படி, மேலிட தலைவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். ஆனால் இந்த விஷயத்தில், ஜனார்த்தன ரெட்டி முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறார்.
கே.ஆர்.பி., கட்சியை, திடீரென பா.ஜ.,வுடன் இணைத்தால், வரும் நாட்களில் ஏதாவது கோரிக்கைகளை வைப்பது கஷ்டமாக இருக்கும். வெளியில் உள்ள சுதந்திரம், கட்சிக்கு சென்ற பின் இருக்குமா என்ற சந்தேகம், அவரை வாட்டுகிறது. பா.ஜ.,வில் இணைப்பதை விட, கூட்டணி வைப்பது நல்லது என, அவர் கருதுகிறார்.
பா.ஜ.,வுடன் கூட்டணி வைப்பதா அல்லது கட்சியில் கே.ஆர்.பி.,யை இணைப்பதா என்பது குறித்து, இன்னும் சில நாட்களில் அவர் முடிவு செய்வார்.