சமூக வலைதள பதிவால் மோதல்: ஒடிசாவில் இணைய சேவை ரத்து
சமூக வலைதள பதிவால் மோதல்: ஒடிசாவில் இணைய சேவை ரத்து
ADDED : செப் 29, 2024 12:01 AM

புவனேஸ்வர்: ஒடிசாவில் சர்ச்சைக்குரிய கருத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, ஒரு பிரிவினர் நடத்திய பேரணியின்போது, போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில், இரு நாட்களுக்கு இணைய சேவை ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
ஒடிசாவில் குறிப்பிட்ட மதம் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேற்று பத்ராக் மாவட்டத்தில் பேரணி சென்றனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது, கூட்டத்தில் இருந்தவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், டி.எஸ்.பி., மற்றும் இரு போலீசார் காயம் அடைந்தனர்; தாசில்தாரின் வாகனமும் சேதமடைந்தது.
இதையடுத்து, போலீசார் குவிக்கப்பட்டு மோதலை கட்டுப்படுத்தினர். எனினும், சந்தியா பகுதியில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறி, தாம்நகர் பகுதிக்கும் பரவியது.
மோதல் தொடர்பாக ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வன்முறை மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், பத்ராக் மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை வரை இரு நாட்களுக்கு இணையதள சேவை ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் பொதுக்கூட்டம், பேரணி நடத்தவும் தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.