மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு உத்தரவு அமல்
ADDED : ஜூன் 08, 2025 07:20 AM

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. 5 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இடஒதுக்கீடு தொடர்பாக மெய்டி - கூகி சமூகத்தினருக்கு இடையே, 2023ல் மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய, அரசின் முயற்சியால் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த பிப்ரவரியில் பா.ஜ., ஆட்சி கலைக்கப்பட்டு தற்போது ஜனாதிபதி ஆட்சி அங்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. மெய்டி இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் தலைவர் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது. தலைவரை விடுவிக்க கோரி, அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் சாலையில் டயர்களை எரித்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இணைய சேவை முடக்கம்
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர கூடுதல் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நிலைமையை கட்டுப்படுத்த இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தவுபால், பிஷ்ணுபூர் மற்றும் காக்சிங் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு உத்தரவு
மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தவுபால், காக்சிங், பிஷ்ணுபூர் ஆகிய 5 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அந்தந்த மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.