என் அரசியல் எதிர்காலத்தை கட்சி தீர்மானிக்கும் ஜாமினில் வந்த முன்னாள் அமைச்சர் பேட்டி
என் அரசியல் எதிர்காலத்தை கட்சி தீர்மானிக்கும் ஜாமினில் வந்த முன்னாள் அமைச்சர் பேட்டி
ADDED : அக் 19, 2024 07:55 PM

புதுடில்லி:“என் அரசியல் எதிர்காலத்தை ஆம் ஆத்மி கட்சியும், அதன் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால்தான் தீர்மானிக்க வேண்டும்,”என, முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறினார்.
டில்லி அரசின் சுகாதாரத் துறை உட்பட பல துறைகளின் அமைச்சராக பதவி வகித்த சத்யேந்தர் ஜெயின், மதுபானக் கொள்கை முறைகேடு மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் 2022ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். திஹார் சிறையில் 18 மாதங்கள் இருந்த ஜெயினுக்கு டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று முன் தினம் ஜாமின் வழங்கியது. அன்று இரவே சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்நிலையில், நிருபர்களிடம் ஜெயின் கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சியும், அதன் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலும் என்ன சொன்னாலும் செய்வேன். என் அரசியல் எதிர்காலத்தை கட்சியும் கெஜ்ரிவாலும்தான் தீர்மானிக்க வேண்டும்.
நாட்டில் அட்டூழியம் நடக்கிறது. மீண்டும் ஆங்கிலேயர் ஆட்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மக்களுக்குச் செய்யும் பணிகளில்தான் அரசுகள் போட்டி போட வேண்டும். ஆனால், பா.ஜ., அதைச் செய்யவில்லை. நேர்மையான அரசை வேலை செய்ய விட மாட்டேன் என தடுக்கின்றனர்.
மொஹல்லா கிளினிக் மற்றும் யமுனை நதியை சுத்தம் செய்யும் பணிகளை துவக்கியதால்தான் நான் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டேன். மத்திய பா.ஜ., ஆட்சி நாட்டுக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று. நாட்டைக் காப்பாற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று முன் தினம் மாலை சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயின், பிரோஸ்ஷா சாலை இல்லத்தில் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்தார்.
இதுகுறித்து, சமூக வலைதளத்தில் 'வெல்கம் பேக் சத்யேந்திரா' என, படங்களை கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, டில்லி முதல்வர் ஆதிஷி சிங், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் உள்ளிட்டோர் சிறை வாசலில், ஜெயினை வரவேற்றனர்.